கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் மேட்டு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் உஷா. இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தனது வீட்டை பூட்டி விட்டு ராஜாகமங்கம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று இருந்தார்.
அதன்பின் இன்று (ஆகஸ்டு 7) வீடு திரும்பிய பெண் தலைமை காவலர் உஷா, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 12 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருள்கள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதைத் தொடர்ந்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் காவலர்களும் வந்து கைரேகைகளை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் தலைமை காவலர் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் தங்க நகைகள், வெள்ளி பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.