அரசின் விதிமுறைப்படி தமிழ்நாடு முழுவதும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் குறிப்பாக இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட அரசின் திட்டங்களுக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வரப்பாளையம் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கிராமசபைக் கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. குடிநீர் பற்றாக்குறை, கழிப்பிட பணிகள், தெரு விளக்கு பராமரிப்பு மாற்றுதல், குடிநீர் மின் மோட்டாரை பழுது நீக்குதல் உள்ளிட்ட, நடக்காத பல பணிகள் குறித்தும், மேலும் மரக்கன்றுகள் நட்டதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது உள்ளிட்டவை குறித்தும் பேசப்பட்டது. கிராமசபைக் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட அனைத்தையும் வீடியோ எடுத்த இளைஞர்கள், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமலைராயசமுத்திரம் ஊராட்சியிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. கிராம நிர்வாகிகள் வரவு செலவுக் கணக்கு நோட்டுகள் கொண்டு வராததால் கூட்டத்தில் பிரச்னை ஏற்பட்டது.
தொடர்ந்து ஊராட்சியில் பஞ்சாயத்து போர்டு கிளார்க், மத்திய அரசின் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாகவும், அந்தக் கணக்கை சரியாக ஒப்படைத்துவிட்டு கிராமசபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் கூட்டத்திற்கு கிராம மக்கள் தடைபோட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை:
பட்டுக்கோட்டை அருகில் உள்ள சுந்தரநாயகிபுரம் கிராமத்தின் முதல் கிராம சபைக் கூட்டம், ஊராட்சி மன்றத் தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. கிராமத்தின் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலைவசதி, வடிகால் வசதி ஆகியவற்றை மேம்படுத்துவது என்றும் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டு என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், மீனவர்கள் வாழ்க்கையை பாதிக்கின்ற, உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றினர். இது அரசுக்கு எதிரான தீர்மானம் என்றும், இதனை நிறைவேற்ற இயலாது எனவும் கூறி அரசு அலுவலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதன் பிறகு கிராமசபைக் கூட்டம் பதிவேட்டில் தீர்மானத்திற்கான அனைத்தையும் எழுதி மக்களிடம் ஒப்புதல் கேட்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைவைத்து சட்டப் போராட்டத்தின் மூலம் இதற்கு ஒரு தீர்வு காண உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற இருந்ததால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
நாகை:
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை ஊராட்சியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி உறுப்பினர்கள் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றக்கோரி மீனவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டத்தை அடுத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் அதற்காக ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்யக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி இறச்சகுளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், நீர் மேலாண்மை குறித்தும், இறச்சகுளம் பகுதியில் உள்ள 26 குளங்களை தூர்வாரி நீர் கொள்ளளவு அதிகப்படுத்துதல், திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுத்தல் என்பது உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்கு உட்பட்ட 48 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு, ஹைட்ரோ கார்பன் திட்டம், ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்ய வேண்டும். மேலும் மணல் குவாரி அமைத்தல் போன்றவற்றிற்கு எதிராக அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கே.வி.கே. நகரில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், பூட்டிக்கிடக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு மின்சார கட்டணமாக ரூ. 60 லட்சம் வழங்கி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்கு இழப்பு ஏற்படுத்தியவர்கள் யார் என்று கிராம மக்கள் எழுப்பிய கேள்விக்கு, சம்பந்தப்பட்ட குடியிருப்பில் நேரில் ஆய்வு நடத்தி தகுதி இல்லாத நபர்களை வெளியேற்றுவதுடன் இழப்பீடு உறுதிசெய்யப்பட்டால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிப்பதாகவும் பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் உறுதி அளித்தார்.
தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் யாரும் குடிவராத பட்சத்தில் அதைதிருமண மண்டபமாக மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம் எனவும் உறுதி கூறினார். இதுதொடர்பாக கிராமசபைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: சேலத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்: அதிமுக்கிய தீர்மானங்கள்...!