இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார்.
தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு வெளியிட்டுள்ள நிலையான பாதுகாப்பு விதிமுறைகளை அனைத்து இடங்களிலும் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.
மக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும், பொது இடங்களுக்குச் செல்லும்போதும், தொழிற்சாலைகள் வணிக வளாகங்கள், பயணம் மேற்கொள்ளும்போதும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், மக்கள் வந்து செல்லக்கூடிய இடங்களில் கைகளைச் சுத்தம்செய்ய சோப்புக் கரைசல் அல்லது கை கழுவும் திரவம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களிடமிருந்து ஒரு கோடியே 85 லட்சத்து 67 ஆயிரத்து 117 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத தனிநபர் அல்லது தொழில் வணிக, இதர நிறுவனங்கள் மீது அபராதம் அல்லது அபராதத்துடன் மூடி சீல்வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தேனாம்பேட்டை மண்டலம் பாரதி சாலையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத துணிக்கடைகள், பாட்டா ஷோரூம் என இரண்டு கடைகள் மூடி சீல்வைக்கப்பட்டன. அதேபோல் சோழிங்கநல்லூர் மண்டலத்திலும் முகக்கவசம் அணியாத பல நபர்களுக்கு மாநகராட்சி சார்பாக அபராதம் விதிக்கப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.