ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோயில் உள்ளது. சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளைக் கொண்ட இக்கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இக்கோயில் கரையில் காவிரியும் ஓடுவதால் பரிகார ஸ்தலமாகவும் வணங்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயில் செவ்வாய் தோஷம், நாக தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்களுக்கும் பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது.
இந்தக் கோயிலில் சேலத்தைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக செயல் அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் கொடுமுடி அருகேயுள்ள ஊஞ்சலூர் வரதராஜபெருமாள் கோயில் உள்பட ஐந்து கோயில்களுக்கும் செயல் அலுவலராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கொடுமுடி உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற பல்வேறு பணிகளுக்கும் போலி ரசீதுகள் அச்சடித்து அதன் மூலம் பல கோடி ரூபாய் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், கோயிலுக்கு நன்கொடை வழங்கும் தொகைக்கு போலி ரசீதுகளைக் கொடுத்து அவற்றை கோயில் கணக்கில் கொண்டு வராமல் முறைகேடு செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறைக்கு பக்தர்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தனி அலுவலர்களைக் கொண்ட இரண்டு குழுக்களை இந்து சமய அறநிலையத்துறை நியமித்தது. கடந்த ஒரு மாதமாக விசாரணைக் குழுவினர் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலிலும், வெங்கம்பூர் வரதராஜ பெருமாள் கோயிலிலும் விசாரணை மேற்கொண்டனர். இந்த இரு கோயில்களிலும் பராமரிக்கப்பட்டு வந்த வரவு, செலவுக் கணக்குகளையும் விசாரணைக் குழுவினர் தணிக்கை செய்தனர்.
அதில், செயல் அலுவலர் முத்துச்சாமி சுமார் மூன்று கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. விசாரணைக் குழுவினர் தங்களது விசாரணை அறிக்கைகளைை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு சமர்ப்பித்தனர். அறிக்கையின் அடிப்படையில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் செயல் அலுவலராகப் பணியாற்றி வந்த முத்துச்சாமி தற்காலிக பணிநீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பனிந்திரரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும் விசராணை முடிவடையும் வரை, முன்னாள் செயல் அலுவலர் முத்துச்சாமி மாவட்டத்தை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.