திருநெல்வேலி: மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன், ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெல்லை மக்களை அச்சத்தில் உறையவைத்துள்ளது.
இந்த கொலை இன்று காலை சுமார் 10:25 மணியளவில் நடந்துள்ளது. பொதுமக்களும், வழக்கறிஞர்களும் பரபரப்பாக நீதிமன்றத்திற்குள் செல்லும் வேளையில் இந்த படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. இளைஞரைக் கொலை செய்தவர்கள் அவரின் கையை வெட்டித் துண்டாக்கியதாக செய்தியாளர் அளித்த முதற்கட்ட தகவலின் வாயிலாக தெரியவந்தது.
காவல்துறையினர் முறையான பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறி, கொலையைக் கண்டித்து திருநெல்வேலி நீதிமன்றத்தின் முன்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொலை வெறி கும்பல்:
விசாரணையில், கீழநத்தம் மேலூரை சேர்ந்த மாயாண்டி என்பவர், இன்று (டிசம்பர் 20) காலை கொலை முயற்சி வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். நீதிமன்ற நுழைவு வாயிலில் அவர் மோட்டார் சைக்கிளில் திரும்பும்போது நீதிமன்றத்தில் இருந்து வெளியே கார் ஒன்று வந்துள்ளது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கார், மாயாண்டி மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் கீழே விழுந்த அவர், காரில் இருந்து ஒரு கும்பல் ஆயுதங்களுடன் இறங்குவதை பார்த்து ஓடியதாகவும், காரில் வந்த கும்பல் மாயாண்டியை கொலை வெறியுடன் துரத்தியதாகவும் காவல்துறையினரிடத்தில் சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பட்டப்பகலில் கொலை:
அங்கிருந்து மெயின் ரோட்டுக்கு மாயாண்டி ஓடிச் சென்ற நிலையில் நான்கு பேர் கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரி வெட்டி கொலை செய்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதில் அவரது கை மணிக்கட்டு, இரண்டு கால்கள் துண்டாகும் அளவுக்கு வெட்டுப்பட்டுள்ளது. நிலை குலைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே சரிந்த அவரை விட்டுவிட்டு, கொலைவெறி கும்பல் வந்த காரில் ஏறித் தப்பிச்சென்றுள்ளது.
இதனையடுத்து தான் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த பாளையங்கோட்டை காவல்துறையினர், அங்கு சென்று பார்த்தப்போது, மாயாண்டி உயிரற்ற நிலையில் இருந்துள்ளார். அவசர ஊர்தியில் இருந்த சுகாதார ஊழியர்கள், மாயாண்டி உடலை பார்த்துவிட்டு அவர் இறந்துவிட்டதாகக் காவல்துறையினரிடத்தில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மாயாண்டியின் உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மூவர் கைது:
கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு சில முக்கிய தகவல் கிடைத்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கீழநத்தம் பஞ்சாயத்து இரண்டாவது வார்டு உறுப்பினராக இருந்த ராஜாமணி என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கீழ நத்தத்தை சேர்ந்த மனோஜ், சுரேஷ், ராமகிருஷ்ணன் ஆகிய மூவரை இந்த கொலை வழக்குத் தொடர்பாக காவல்துறை கைது செய்திருப்பதாக திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையர் ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.