மதுரை: கஞ்சா கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்க கோரி விழுந்தமாவடி ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் தாக்கல் செய்த மனுவில், பல்வேறு நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி ஊரை சேர்ந்த மகாலிங்கம் மற்றும் அலெக்ஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு, "பி.ஆர்.புரம் புதுப்பாலம் அருகில் கஞ்சா வைத்து விற்பனை செய்வதாக, கடந்த 12ஆம் தேதி கீழையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் எனது அப்பாவை (மகாலிங்கம்) முதல் குற்றவாளியாகவும் என்னை (அலெக்ஸ்) இரண்டாவது குற்றவாளியாகவும் பொய்யான வழக்கில் போலீசார் சேர்த்துள்ளனர்.
எனது அப்பா விழுந்தமாவடி ஊராட்சி மன்ற தலைவராக (சுயேச்சை வேட்பாளர்) உள்ளார். நான் விழுந்தமாவடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்து வருகிறேன். எங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்கு இந்த வழக்கு போடப்பட்டுள்ளது” இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் ஜாமீன் வேண்டியும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அலெக்ஸ் முன் ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தனி தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: சிபிசிஐடி கைக்கு போகும் ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் வழக்கு.. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்!
அப்போது மனுதாரர் தரப்பில், "மனுதாரர்களான மகாலிங்கம் ஊராட்சி மன்ற தலைவராகவும், அவரது மகன் அலெக்ஸ் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். இவர்கள் மீது உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியால், இதுபோன்று பொய்யான வழக்குகளை போலீசார் பதிவு செய்து வருகின்றனர். எனவே, இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்க வேண்டும்," என வாதிட்டுள்ளார்.
இதனைப்பதிவு செய்த நீதிபதி, மனுதாரர் மற்றும் அவரது அப்பா மீது 2023 ஆம் ஆண்டு இதேபோல் போதை தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆனால், இதுவரை அந்த வழக்கில் அவர்கள் குற்றம் பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை, மனுதாரரும், அவரது அப்பாவும் சம்பந்தப்பட்ட பகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தொடர்ந்து, அப்பகுதியில் மக்களுக்கான திட்டங்களுக்காக அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
இந்த வழக்கில், தந்தை மகன் இருவர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுயேட்சை வேட்பாளராக இருப்பதால் இதுபோன்று வழக்குகள் பதிவு செய்யப்படுகிறதா? என கருத்து தெரிவித்த நீதிபதி, மனுதாரருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் மகாலிங்கத்திற்கு ஜாமீனும், அவரது மகன் அலெக்ஸூக்கு முன் ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டுள்ளார்.