தமிழ்நாட்டின் அரக்கோணம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் திமுகவின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மகன் சுந்தீப் ஆனந்த் மீது அந்நிய செலாவணியில் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கி முன் ஒப்புதல் இல்லாமல், சிங்கப்பூரில் உள்ள சில்வர் பார்க் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதாக, அவர்கள் மீது அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (ஃபெமா) கீழ் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த அமலாக்க இயக்குநரகம், அந்நிய செலாவணி மேலாண்மை (பரிமாற்றம் அல்லது வெளிநாட்டு பாதுகாப்பு வெளியீடு) விதிமுறைகள் 2004 ஃபெமாவின் பிரிவு 37ஐ மேற்கோள் காட்டி, அந்த வெளிநாட்டு சொத்துக்கு இணையாக இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய இன்று (செப்டம்பர் 12) உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சொந்தமான விவசாய நிலங்கள், இடங்கள், வீடுகள், பிற அசையா சொத்துக்கள், வங்கிக் கணக்குகளில் வைத்திருந்த ரூ. 89.19 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.