கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கலைவாணர் அரங்கில் மூன்றாவது தளத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான நேற்று கேள்வி நேரத்தில் விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,"அரியலூர் அனிதா முதல், இன்று திருச்செங்கோடு மோதிலால் வரை, பல மாணவ மாணவிகள் "நீட்" தேர்வுக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள்."நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்று திமுக உள்ளிட்ட அனைவருமே தொடர்ந்து மத்திய அரசை வற்புறுத்தி வருகிறோம்.
இதே பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக - மாணவச் செல்வங்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்கக் கோரி இந்த அவையில் இரு மசோதாக்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் அனுமதிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் இந்த அவையின் உணர்வுகளை மத்திய அரசு கிஞ்சித்தும் மதிக்கவில்லை. அனுப்பிய மசோதாக்களுக்கும் இதுவரை ஒப்புதல் வழங்கிடவில்லை.
செப்டம்பர் 12ஆம் தேதி - அதாவது "நீட்" தேர்வுக்கு முதல் நாள் மட்டும் - ஒரே நாளில் மதுரை ஜோதி ஸ்ரீ துர்கா, தர்மபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால் என மூன்று மாணவ - மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
“I am sorry. I am tired” என்று மதுரையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின்- ஆடியோ வாய்ஸ் ஒட்டுமொத்த தமிழக “மாணவர்களின் வாய்ஸ்” என்பதை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.
இதற்கிடையில் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் எண்ணிப் பார்க்க முடியாத அடக்குமுறைகள், கெடுபிடிகள் நடந்திருக்கிறது. புதுமணத் தம்பதியின் தாலியைக் கழற்றி வைத்து விட்டுத் தேர்வு எழுதுங்கள் என்ற கொடுமை நெல்லையில் நடைபெற்றுள்ளது. பசிக் கொடுமையால் மாணவிகள் மயங்கி விழுந்துள்ளார்கள். அடிப்படை வசதிகள் இன்றி பெற்றோரும், தேர்வு எழுதப் போன மாணவர்களும் தவித்துள்ளார்கள்.
இந்தி வழிகாட்டுதல்கள்- மதுரை தேர்வு மையங்களில் தலைதூக்கி - தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழுக்குப் பதில் ஆங்கிலக் கேள்வித்தாள் கொடுத்து சில மையங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கரோனா காலத்தில் இப்படியொரு கொடுமையான நீட் தேர்வு தேவையா?
ஆகவே தமிழ்நாட்டின் சட்டப்பேரவையையும் - தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்வுகளையும் மதிக்காத - நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யாத மத்திய அரசை எதிர்த்தும், நீட் தேர்வை ரத்து செய்ய அ.தி.மு.க. அரசு கேட்கவில்லை என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களைக் கண்டித்தும் கண்டனத் தீர்மானம் நாம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவக் கல்வியில் சேர்க்கை நடைபெறுவதை அரசு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு திமுக உறுதுணயாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்"என அவர் உறுதியளித்தார்.