தேனி மாவட்டம் வைகை அணை அருகே உள்ள ஜெயமங்கலத்தில் டாடா நிறுவனத்தின் காபி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், வட்டியில்லாத கடனுதவி, குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 மாதங்களாக ஆலை நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் இதுவரை உடன்பாடு எட்டப்படாத நிலையில் கடந்த 6 நாள்களாக கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டாடா தொழிலாளர்களின் போராட்டத்திற்கு திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார் ஆகியோர் நேற்று (நவ.20) நேரில் சென்று ஆதரவளித்தனர்.
பின்னர், டாடா காபி தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆலை நிர்வாகத்தினருடன் தங்கதமிழ்செல்வன் தலைமையிலான திமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து தொழிலாளர்களிடையே பேசிய தங்க தமிழ்ச்செல்வன், தொழிலாளர்களின் 24 அம்ச கோரிக்கைகளில் அத்தியாவசிய கோரிக்கைகளான ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை தொழிற்சாலை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாள்களில் உரிய முடிவு எடுக்க உள்ளதாக ஆலை நிர்வாகம் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.
போராடிவரும் டாடா தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக ஆலை நிர்வாகம் அறிவிக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.