இது தொடர்பாக அவர் இன்று (ஆகஸ்ட் 1) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தாய்மொழியை காக்க 21 பேர் தீக்குளித்தும் 700க்கும் மேற்பட்டவர்கள் நெஞ்சில் குண்டடி தாங்கியும் போராட்ட களத்தில் வீர மரணம் அடைந்த இந்தி திணிப்பை எதிர்த்த போர் தமிழ் மண்ணில் மட்டுமே நடந்த ஒன்று. அதேபோல, அறமற்ற முறையில் நீட்டை திணித்த போதும் அறிவில் சிறந்த எங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள் 10க்கும் மேற்பட்டோர் நஞ்சருந்தியும், தூக்கிட்டும் தங்கள் உயிரை மாய்த்து இந்திய அதிகார வர்க்கத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழ்நாட்டிற்காக மட்டும் ஒட்டுமொத்த இந்திய துணைக்கண்டத்தில் உள்ள அனைத்து தேசிய இன மக்களின் உரிமைகளை காக்கவும் தான் இந்த எதிர்குரல் எழும்பியன.
அப்படிப்பட்ட இந்தி திணிப்பை விடவும், நீட் எமனை விடவும் ஆயிரம் மடங்கு குரூரமானது புதிய தேசிய கல்விக்கொள்கை திட்டம். எவ்வளவு கொடுத்தாலும் அழியாத செல்வம் கல்விச் செல்வத்தை தனியார் தொழில் நிறுவனங்கள் தங்கள் செல்வத்தை பெருக்கிக்கொள்ள வசதிகளை செய்து தருவது ஒரு அறமற்ற செயல். மூன்றாண்டு இளநிலையை நான்காண்டு படிப்பதாலோ, எம்.பில் படிப்பை நிறுத்துவதாலோ, அவரவர் தாய்மொழியின் மீது கட்டாயமாய் பிரிதொரு மொழியை சேர்ப்பதாலோ கல்வித்துறையில் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடும் என்பதுதான் சாமானியர்களின் கேள்வி. மக்களுக்கு உயிர் பயத்தை கொடுத்து விட்டு தொடர்ந்து அவர்களின் உரிமைகளை பறிக்கின்ற மட்டரகமான ஒரு நிலையை மத்திய அரசு கையில் எடுத்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, ஆர்.எஸ்.எஸ். சனாதன சக்திகளின் திட்டங்களை நிறைவேற்ற கரோனா கிருமி பரவலை ஒரு கேடயமாக பயன்படுத்தி வருவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கின்ற துறை கல்வித்துறை, அந்தத் துறையில் கொண்டுவரப்படும் மாற்றங்களுக்கு பல நீண்ட விவாதங்களும், சட்டப்பேரவை - நாடாளுமன்ற கூட்டத்தொடர்களும் பல மாதங்கள் இடைவெளியின்றி நடத்தப்பட்டு மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட்டு கல்வியாளர்களால் திருத்தம் மேற்கொண்டு கவனமாக கையாளப்பட வேண்டிய ஒரு திட்டத்தை, போகிற போக்கில் ஒரு அரசு அறிவித்து விட்டு போகிறதென்றால் இது கல்விக் கொள்கையா? இனி போதிக்கப் போவது கொள்ளை கல்வியா? என்கிற கேள்விதான் விகாரமாக எழுகிறது.
1968ஆம் ஆண்டில் தேசிய கல்வி கொள்கை முடிவின்படி மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு நடைமுறைப்படுத்த எத்தனித்தபோது, அப்போதைய முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா மும்மொழி கொள்கையை கடுமையாக எதிர்த்தார். அதன் விளைவாக மும்மொழி திட்டம் கைவிடப்பட்டது. இன்று குறுக்கு வழியில் நவீன முறையில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தவே இந்த புதிய கல்விக்கொள்கை முறை.
இக்கல்விக் கொள்கையின் படி “தேசிய கல்வி ஆணையம்“தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும். மாநில அரசுகள் கட்டுப்பட்டுத்தான் இருக்க வேண்டுமேயொழிய தனித்து எந்த முடிவு எடுப்பதையும் புதிய கல்விக் கொள்கை முற்றிலுமாக மறுக்கிறது. மாநில அரசுகளை அடிமையை போல வைத்துக்கொண்டு ராஷ்டிரிய சிக்ஷா ஆயோக்(RSA) உயர் அதிகாரத்துடன் இயங்கும். ஒருவேளை இப்படிப்பட்ட கொள்கை வரைவுக்கு ஒரு மாநில அரசு ஆதரவு அளித்தால் அதைவிட கொடூரமான செயல் மனித குலத்தில் வேறெதுவும் இருக்காது.
கல்வி நிறுவனங்களின் தர நிர்ணயம் முதற்கொண்டு, தனியாருக்கு அனுமதி அளிப்பது வரை அனைத்தையும் தேசிய கல்வி ஆணையமே பார்த்துக்கொள்ளும். இதில் மாநில அரசின் தலையீடே கூடாதென்பது ஜனநாயக படுகொலைக்கு சமமானது. தொழிற்கல்வி பயிற்சி என்கிற பெயரில் குலக்கல்வி முறையையும் புதிய கல்விமுறை தன்னகத்தே கொண்டுள்ளது. பன்னாட்டு கல்வி வணிகத்தை வளர்த்தெடுத்தல், உள்நாட்டில் பரவலாக கல்வியை வியாபாரமாக்கல் இவைதான் இந்த புதிய கொள்கையின் சாரம்சமாக உள்ளது.
புதிய கல்விமுறை நடைமுறைக்கு வந்துவிட்டால் இதன் விளைவுகள் இனி வரும் அனைத்து தலைமுறைகளையும் கேள்விக்குறியாக்கி, அவர்களின் கனவுகளை கருவிலேயே கலைத்து, பெரும் சந்தை வணிகமேடாக கல்வித்துறை மாறிவிடும் என்பதே பேருண்மை. இப்படிப்பட்ட பெருந்தீங்கான கல்விமுறையை மத்திய அரசு நடைமுறை படுத்தினாலோ, மாநில அரசு வழிமொழிந்தாலோ அதன் விளைவுகளை தமிழ்நாட்டில் சம்மந்தப்பட்டவர்கள் சந்தித்தே ஆகவேண்டும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.