மத்திய அரசு ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யு, ஏஐஆர்எப் ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று இரவு தங்களின் ரயில்வே குடியிருப்பு வீடுகளில் உள்ள மின் விளக்குகளை அணைத்து வீட்டின் முன்பு செல்போன் டார்ச் லைட்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக திண்டுக்கல் ரயில்வே குடியிருப்புகளில் மொத்தமுள்ள 228 குடும்பத்தினரும் குடியிருப்பு வீடுகளில் விளக்குகளை அணைத்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.
இந்தப் போராட்டம் எஸ்ஆர்எம்யூ கோட்ட உதவி செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் கிளை உதவி செயலாளர் ஜெயச்சந்திரன், வெங்கட்ராமன், கிளை பொருளாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.