திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதையடுத்து குடகனாறு ஆற்றின் நீரை நம்பியுள்ள விவசாயிகள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முதற்கட்டமாக நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், தற்போது அது நீர்த்துப்போய் உள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தற்போது குடகனாறில் இருந்து அனுமந்தராயன் கோட்டை பகுதியில் உள்ள குளத்திற்கு தண்ணீர் வந்துள்ளது.
அங்கிருந்து அருகேயுள்ள தாமரைக்குளம் நிறைந்தபின் அதில் இருந்து வெளியேறும் உபரிநீர் வேடசந்தூர் வழியாக காவிரியை சென்றடையும். ஆனால் இம்முறை தாமரைக்குளம் நிறைவதற்கு முன்பாகவே அதன் மதகு திறக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீரை தேக்க முடியாது என்றும் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் நீர் பயன்படாது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எனவே, உடனடியாக மதகுகளை மூடி தாமரைக்குளம் நிறைந்த பின்னர் நீரை வெளியேற்ற வேண்டும் என பொன்மான்துறை, மயிலாப்பூர் உள்ளிட்ட கிராமங்களைைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.