திருவாரூர்: குளிக்கரை கிராமத்தை சேர்ந்த குமாரி அபிராமி (21). அதே ஊரை சேர்ந்தவர் அவருடைய தோழி சினேகா (21). இருவரும் திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானில் இயங்கி வரும் திரு.வி.க. அரசு கலை கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர்.
இந்தநிலையில், இருவரையும் அபிராமியின் தம்பி முத்துக்குமார் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு திருவாரூர் அருகே உள்ள சீனிவாசபுரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி மோதியதில் அபிராமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் படுகாயமடைந்த முத்துக்குமார், சினேகா ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருவாரூர் தாலுகா காவல்துறையினர், வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.