சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரும், அரசு செயலருமான சத்யபிரதா சாகு காணொலி மூலமாக மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் சிறப்புமுறை சுருக்கத் திருத்தம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அலுவலம் வெளியிட்டுள்ள குறிப்பில், "01.01.2021 அன்று தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு செயல்படுத்தப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் 16.11.2020ஆம் தேதியன்று வெளியிடப்பட உள்ளதால், அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடனும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தொடர்திருத்த நடைமுறையின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் குறித்த கோரிக்கை மற்றும் ஆட்சேபனை விண்ணப்பங்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வாக்காளர் உதவி எண் (1950) செயல்பாடு, வாக்காளர் அடையாள அட்டை வழங்குதல் ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் வே. ராஜாராமன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.