சென்னை ஆவடி பத்திரபதிவாளர் அலுவலகம், குளக்கரை தெருவில் இயங்கிவருகிறது. இங்கு ஆவடி திருநின்றவூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பத்திரப்பதிவு, பதிவு திருமண போன்ற அரசு சம்பந்தமான அனைத்து பதிவுகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது உள்ளிட்டவைகளை வலியுறுத்தி தளர்வுகளை அரசு அறிவித்திருந்தது.
தற்போது ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் குறிப்பாக நேற்று அமாவாசை என்பதால் அங்கு வந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தகுந்த இடைவெளியை மறந்து இயல்புநிலைபோல் படிக்கட்டிலும் அலுவலகம் செல்லும் வழியிலும் கீழே அமர்ந்து மிகவும் சிரமப்பட்டனர்
தொடர்ந்து பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளே நெருக்கத்தில் நின்று முண்டியடித்துக் கொண்டு தங்களின் பதிவுகளை செய்தனர்.
குறிப்பாக வாயிலில் கிருமி நாசினி, உடல் வெப்பநிலை கண்டறிதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளில் தொய்வு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் பத்திரப்பதிவு அலுவலகமானது போதுமான இடம் வசதி இல்லாததால் ஒருவரோடு ஒருவர் நெருங்கி நிற்கும் சூழலில் கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உருவாகியது பெரும் அச்சத்தை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவடி சார் பதிவாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, "போதிய இட வசதி இல்லாததால்தான் தகுந்த இடைவெளி கடைப்பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, இனி வரும் காலங்களில் முறையாக பின்பற்றப்படும். "என உறுதியளித்தார்.