மதுரை: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவா என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மாவட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு குறைவான அளவில் சிறு கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கு சுற்றுச்சூழல் ஒப்புதல் வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டில் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிலுள்ள அலுவலர்கள் மதிப்பீடு செய்வதற்கான போதிய நிபுணத்துவம் இல்லாதவர்களாக இருப்பதாகக்கூறி அதன் செயல்பாட்டை நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பித்தது. ஆனால், விருதுநகர் மாவட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் 33 குவாரிகளுக்கு முன் தேதியிட்டு ஒப்புதல்கள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளன.
லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவு
ஆகவே சட்டவிரோதமாக 33 சகுவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தலைவர், கனிமவளத் துறை இணை இயக்குநர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் ஆகியோர் அமர்வு, “வழக்கு குறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 'வேலையில்லா பட்டதாரி' பட வழக்கு - புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு