ஆண்டு தோறும் நவம்பர் 21ஆம் தேதி உலக மீனவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் தினம் இன்று கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மீனவன் ரத்ததான குழு மற்றும் கே.டி.எஃப் இளைஞர்கள் சார்பில் ரத்த தான நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக மீனவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் கோல்டன் பிரதர் தலைமையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரத்தம் தானம் வழங்கப்பட்டது.
பின்னர் ஊடகங்களைச் சந்தித்து பேசிய தமிழக மீனவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் கோல்டன் பரதர் கூறுகையில், "மீனவ சமுதாயத்தை இரண்டாம் தர குடிமக்களாக தமிழ்நாடு அரசு நடத்துகிறது.
மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழ்நாடு மீனவர்களின் நலனை பாதுகாத்து, எங்களின் படகுகள் அந்நிய ராணுவத்தின் எந்தவிதமான தாக்குதலுக்கும், சேதத்திற்கும் உள்ளாகாமல் பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இந்த ரத்த தான நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டு தங்களது ரத்தத்தை தானமாக வழங்கினர்.