உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்குரைஞர் கதிர்வேல் பணிபுரிந்து வந்தார். அண்மையில், அவரது பதவி காலம் நிறைவடைந்ததையடுத்து குமரி மாவட்டம் வெளிக்கோடு கிராமத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் விக்டோரியா கவுரி என்பவர் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பெண் வழக்குரைஞர் ஒருவர் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மதுரை சட்டக்கல்லூரியில் பயின்ற இவர் 25 ஆண்டுகளாக வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார். இந்த பொறுப்பு அளிக்கப்படுவதற்கு முன்னதாக பாஜக தேசிய மகளிரணி பொதுச் செயலாளராகவும், சென்னை காமராஜர் துறைமுகத்தின் தனி இயக்குநராகவும் பதவி வகித்து வந்துள்ளார்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2014ஆம் ஆண்மு முதல் மத்திய அரசின் மூத்த வழக்குரைஞராகவும் பணியாற்றி வந்துள்ளார். இவரது கணவர் துளசி முத்துராம், தனியார் நிறுவனம் ஒன்றில் தலைமை பொறியாளராக உள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
உதவி சொலிசிட்டர் ஜெனரலாக இன்று (செப்டம்பர் 9) பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு மூத்த வழக்குரைஞர்கள், பெண் வழக்குரைஞர்கள், மத்திய, மாநில அரசு வழக்குரைஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.