வட சென்னையில் கரோனா பாதிப்பு குறைந்தாலும் கோடம்பாக்கம், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாக பரவி வருகிறது. இந்த நோய்த் தொற்று பரவலை குறைப்பதற்காக மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று (ஜூலை 23) 518 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நோய்த் தொற்று அதிகம் பரவி வரும் அண்ணாநகரில் 65 மருத்துவ முகாம்களும், திருவிக நகரில் 53 மருத்துவ முகாம்களும், ராயபுரத்தில் 52 மருத்துவ முகாம்களும், தேனாம்பேட்டையில் 51 மருத்துவ முகாம்களும் நடைபெற்றன.
518 மருத்துவ முகாம்களில் மொத்தம் 27 ஆயிரத்து 982 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 1,862 நபர்கள் அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் சென்றனர். மீதமுள்ள நபர்களுக்கு நோய்க்கு ஏற்ற மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
மே 8ஆம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 21,602 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. அதில் 13 லட்சத்து 71 ஆயிரத்து 24 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 65 ஆயிரத்து 572 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இன்று 531 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.