அண்மைகாலமாக தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்து வருவதாக உளவுத்துறையினர் கண்டறிந்தனர். இது தொடர்பான தகவல்களைத் திரட்ட மாவட்ட காவல்துறையினர் பல ரகசியக் குழுக்களை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், நேற்று(ஆக.19) தென்காசி மாவட்ட காவல்துறையின் உளவுப் பிரிவுக்கு புளியங்குடி, சுரண்டை, பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகளுடன் சுற்றி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் உத்தரவின் பேரில் ரகசிய தனிப்படையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் தென்காசியைச் சேர்ந்த முகமது பாதுஷா (40) என்பவர் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்ட அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவரது கூட்டாளியான மாரி செல்வராஜ் (35), வீரகேசவ லிங்கம் (30), சுடலை (50) ஆகிய நான்கு பேரிடம் விசாரணை செய்ததில், தென்காசி மாவட்டத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் நான்கு பேரிடமிருந்து 15 ஆயிரத்து 97ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்து செய்யப்பட்டன.
மேலும், அவர்களிடம் கள்ள நோட்டு எங்கு அச்சடிக்கப்பட்டது, இந்த குற்ற செயலில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து தகவல்களை அறிய தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. தென்காசி மாவட்டத்தில், தொடர்ந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுவரும் கும்பல்களை குறித்த செய்திகள் வெளியாகி வருவதால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.