"மனிதி வெளியே வா, மனிதன் என்ற சொல்லுக்குள்ளே அடங்காதே பெண்ணே, உயரம் உனதே தான் அமர்ந்தால் உயரம் தெரியாது" என்ற வரிகளுக்கேற்ப பெண்கள் தைரியமாக வெளியேவந்து, கல் உடைக்கும் வேலையிலிருந்து கணினித் துறை வரை அனைத்துத் துறைகளிலும் களமிறங்கி சாதனை படைத்துக்கொண்டிருக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையில்லை.
இருப்பினும், ஸ்கூல் டீச்சர், டெய்லரிங், பியூட்டி பார்லர் என்பன போன்ற வேலைகள் பெண்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி இங்கு எழுதப்பட்டுள்ளது. ஆனால், பெண்களும் இதுபோன்ற துறையை விரும்பி தேர்ந்தெடுக்கின்றனர். கடினமான வேலைகளைப் பெண்கள் தேர்ந்தெடுப்பதில்லை. பெண்கள் மென்மையானவர்கள், அவர்களால் உடல் உழைப்பை அதிகம் தரும் பணிகளில் ஈடுபட முடியாது என்ற காரணத்துடன் ஒரு பொதுவான கருத்து இங்கு நிலவிவருகிறது.
ஆனால் இவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி, உடல் உழைப்பை அதிகளவில் கொடுத்து சில பெண்கள் சாதனை படைத்துவருகின்றனர். அந்த வகையில், அதிகடிப்படியான உடல் உழைப்பை ஏற்படுத்தும், உடலெங்கும் அழுக்கை ஏற்படுத்தும், ஏன் ஆண்களே செய்யத் தயங்கும் தொழிலான லேத் வேலை, லாரிகளுக்கு பஞ்சர் ஒட்டுவது, டிராக்டரில் உழவு செய்வது என்பன போன்ற தொழில்களைச் சிறப்பாகவும் திறமையாகவும் செய்துவருகிறார் சித்ரா.
மகளிர் தினமான இன்று சாதனை படைத்த பெண்கள் பலர் குறித்து பார்த்துக்கொண்டிருக்கும்போது, ஆண்களுக்கு நிகராக அசத்தும் இரும்பு பெண்மணி சித்ரா பற்றிய சிறு தொகுப்பு தான் இது.....
மதுரை மாவட்டத்தை சேர்ந்த சித்ரா விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அனு, மகா, அர்ச்சனா என்ற மூன்று மகள்கள் உள்ளனர். பெரிய அளவில் படிக்க வசதி, வாய்ப்பு இல்லாத காரணத்தால் காளீஸ்வரன் கடந்த 21 வருடங்களாக வாகனங்களுக்கு டயர் பஞ்சர் பார்க்கும் கடை வைத்து நடத்திவருகிறார். சொந்த ஊரான விருதுநகரில் தொழில் சரிவர அமையாததால் திருப்பூருக்கு புலம்பெயர்ந்தவர் அங்கும் தனது பஞ்சர் பார்க்கும் கடையை நிறுவியுள்ளார்.
ஆரம்ப காலத்தில் ஆட்களை வைத்து தொழில் நடத்த நினைத்த அவரால், குடும்பப் பணிச்சுமை காரணமாக அதனை கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதன் காரணமாக பணியாட்களை நிறுத்திவிட்டு காளீஸ்வரன் மனனவி சித்ராவை உதவிக்கு கடையில் அமர்த்தியுள்ளார். கணவர் கடையில் இல்லாத நேர த்தில், அவ்வப்போது சின்னச் சின்ன வேலையான ஜாக்கி வைப்பது, டயரை உருட்டுவது என்று ஏதேனும் ஒன்றை செய்துகொண்டே இருந்துள்ளார். நாளடைவில் அவர் பஞ்சர் பார்ப்பதில் சிறந்து விளங்குமளவிற்கு தேர்ந்துள்ளார்.
5 ஆண்டுகளுக்கு முன்பு எந்த வேலையும் செய்யத் தெரியாத சித்ரா இப்போது இரு சக்கர வாகனம் முதல் லாரி, ஜேசிபி போன்ற கனரக வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டுதல், வெல்டிங் செய்தல், டயர்களை கழற்றி மாட்டுதல் போன்றவற்றை தனியாகவே அசாத்தியமாக செய்து அசத்திவருகிறார் சித்ரா.
பொதுவாக பஞ்சர் ஒட்டும் பணியில் ஆண்களை மட்டுமே நாம் பார்க்க முடியும். ஏனெனில், அதற்கு நல்ல உடல் வலு அவசியமாகும். அப்போதுதான் சக்கரங்களைக் கழற்ற முடியும். எனினும், உடல் முழுவதும் மண், கரி, அழுக்கு என எதையும் பொருட்படுத்தாமல் தனது குடும்பத்தின் நலன் காக்க தானாகவே முன்வந்து பஞ்சர் பார்க்கும் வேலையில் ஆர்வம் காட்டி தனக்கென ஒரு தனிப் பெயரையும் பெற்றுள்ளார் சித்ரா.
இதுகுறித்து சித்ரா கூறுகையில், "ஆரம்பக் காலங்களில் கணவருக்கு துணையாக கடையில் அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்து வந்தேன். நாளடைவில் குடும்பத்தின் வறுமையைப் போக்க நானும் அவருடன் இணைந்து பணியாற்ற தொடங்கினேன். ஆரம்பக் காலங்களில் இந்தத் தொழில் மிகவும் கடினமாக இருந்தது. தினமும் அடிபடாத நாட்களே கிடையாது.
ஆனாலும் இந்தத் தொழிலை நான் விரும்பி செய்து வருகிறேன். நாளொன்றுக்கு 500 முதல் 1,000 ரூயாய் வரையில் வருமானம் கிடைக்கிறது. இருப்பினும் இவை கடன்கள், குழந்தைகளின் படிப்பு உள்ளிட்டவற்றிற்கே சரியாக போய்விடுகிறது. வாழ்க்கையில் முன்னேற இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மென்மையானவர்கள் பெண்கள் என்ற பொதுப்புத்தியைத் தகர்த்தெறிந்து கடினமான பணிகளை கூட எளிதாகப் பெண்களால் கையாள முடியும் என நிரூபித்து ஆண்களுக்கு நிகராக அசத்திவரும் இரும்பு பெண்மணி சித்ராவை, இந்த மகளிர் தினத்தில் நாமும் வாழ்த்துவோம்!
இதையும் படிங்க: சென்னையில் பெண்கள் மட்டுமே இயக்கும் நடமாடும் தேநீர் கடை