திருப்பூர்: திருப்பூர் கே.பி.ஆர் மில்லில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தேசிய அளவிலான த்ரோபால் போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ள நிலையில், அவர்களுக்கு திருப்பூர் ரயில் நிலையத்தில் பெண் தொழிலாளர்கள் திரண்டு ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்பு அளித்தனர்.
46வது சீனியர் நேஷனல் த்ரோபால் சாம்பியன்ஷிப் ஜார்க்கண்டில் நடைபெற்றது. இதில் ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் பிரிவுகளில், திருப்பூர் கே.பி.ஆர் மில்லில் பணி புரியும் பெண் தொழிலாளர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், சீனியர் த்ரோபால் போட்டியில் கே.பி.ஆர் மில் பெண் தொழிலாளர்கள் விளையாடிய தமிழக அணி, சாம்பியன் பட்டம் வென்றது.
இதையடுத்து, வெற்றிக் கோப்பையுடன் திருப்பூர் வந்த பெண் தொழிலாளர்கள் அணிக்கு, திருப்பூர் ரயில் நிலையத்தில் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், பெண் தொழிலாளர்கள் திரண்டு ஆட்டம், பாட்டத்துடன் வெற்றி பெற்ற பெண்களை வரவேற்றனர்.
இதுகுறித்து வெற்றி பெற்ற த்ரோபால் அணி கேப்டன் வைஷ்ணவி கூறுகையில், "ஆறு ஆண்டுகளாக கே.பி.ஆர் மில்லில் பணியாற்றி வருகிறோம். இங்கு பெண் தொழிலாளர்களுக்கு கோ-கோ, கபடி, த்ரோபால் பயிற்சிகளை அளித்து, விளையாடுவதற்கு வாய்ப்பும் அளிக்கிறார்கள். எங்களை ஜார்க்கண்ட் அனுப்பியதன் மூலம், தேசிய அளவில் 24 அணியினர் பங்கேற்ற போட்டியில் சாம்பியன் பரிசை வென்று இருக்கிறோம்.
தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகளாக வெற்றி பெற்று வருகிறோம். எங்களது நிறுவனம் தினமும் காலை, மாலை நேரத்தில் விளையாடுவதற்கு வாய்ப்பு அளித்ததன் மூலம், பயிற்சி பெற்று இந்த வெற்றியை அடைந்து இருக்கிறோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: வேலூரில் களைகட்டிய புத்தாண்டு… பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய போலீஸ் எஸ்பி!