திருப்பூரை அடுத்த ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்த அன்னபூரணி - செந்தில்குமார் தம்பதிக்கு திருமணமாகி 23 வருடங்களாகின்றன. இந்நிலையில், செந்தில்குமார் புதிதாக தொழில் தொடங்குவதாக தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய அன்னபூரணி, சுய உதவிக் குழுக்கள், தனியார் நிதி நிறுவனம் உள்ளிட்ட இடங்களிலிருந்து சுமார் 2 லட்சத்துக்கும் மேல் கடன் வாங்கி கொடுத்துள்ளார்.
இதையடுத்து, செந்தில்குமார் அதே பகுதியைச் சேர்ந்த மீனாகுமாரி என்ற பெண்ணுடன் கடந்த வாரம் தலைமறைவாகியுள்ளார். இதனிடையே கடன் கொடுத்தவர்கள், அன்னபூரணியிடம் கடன் கேட்டு தகாத வார்த்தைகளால் பேசிவருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அன்னபூரணி, திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் தனது கணவரை மீட்டு கொடுக்கும்படி புகார் அளித்திருக்கிறார். எனினும் அங்கிருந்த காவல் துறையினர், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனிடையே இன்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு வந்த அன்னபூரணியிடம் காவல் துறையினர், மீண்டும் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த அன்னபூரணி, காவல் துறையினர் தன்னை அங்கும் இங்கும் அலைக்கழிப்பதாக கூறியும், தனது கணவரை உடனடியாக மீட்டுத்தரும்படி கூறி, திருப்பூர் வடக்கு காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து வடக்கு காவல் நிலைய காவலர்கள், திருமுருகன்பூண்டி காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியதைத் தொடர்ந்து அன்னபூரணி, தனது தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.