திருப்பூர்: உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த ராமர், பழனிசாமி, வேலுச்சாமி, சோமசுந்தரம் ஆகியோருக்கு, கணக்கம்பாளையம் கிராமத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு ஒவ்வொருவருக்கும் தலா 2 ஏக்கர் விவசாய நிலத்தை அரசு வழங்கியது. மேற்படி நிலத்தை அவர்கள் அனுபவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அதற்குப் பக்கத்து நிலத்துக்காரரான, ஊர்மிளா ஸ்ரீதர் என்பவர் அந்த நிலங்களை விலைக்குக் கேட்டு வந்துள்ளதாகவும் மேலும் இவர் நடிகர் சத்யராஜின் நெருங்கிய உறவுக்காரர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊர்மிளா ஸ்ரீதருக்கு அந்த நிலத்தை விலைக்குத் தர இயலாது என்று ராமர், பழனிசாமி, வேலுச்சாமி, சோமசுந்தரம் ஆகிய நான்கு பேரும் மருத்துள்ளனர்.
அதனை அடுத்து, மேற்படி 4 பேரது நிலங்களையும் போலியான ஆவணங்களைத் தயாரித்து, ஊர்மிளா ஸ்ரீதர் தனது பெயரில் பதிவு செய்து மோசடி செய்துள்ளதாகக் கூறி ராமர், பழனிசாமி, வேலுச்சாமி, சோமசுந்தரம் ஆகியோர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதன் தொடர்ச்சியாக தற்போது புகாரின் அடிப்படையில் ஊர்மிளா ஸ்ரீதர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், நேற்று (நவ. 08) ராமர், பழனிசாமி, வேலுச்சாமி, சோமசுந்தரம் ஆகிய 4 பேரும் ஊர்மிளா ஸ்ரீதரை கைது செய்து தங்களது ஆவணங்களை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி, மீண்டும் மற்றொரு மனுவினை திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "ஏற்கனவே இறந்து போனவர்களின் ஆதார் அட்டைகளின் மூலமாக எங்களது ஆதார் அட்டைகளைப் போலியாகத் தயாரித்து விவசாயம் செய்வதற்காக அரசு எங்களுக்கு வழங்கிய நிலங்களைத் தனது பெயருக்கு ஊர்மிளா ஸ்ரீதர் ஆவணமாற்றம் செய்துள்ளார்" என்று புகார் செய்தனர்.
மேலும், ஒருவருக்கு தலா இரண்டு ஏக்கர் வீதம் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 ஏக்கர் நிலத்தை மோசடியாக ஆவணப்பதிவு செய்து, தனது பெயருக்கு மாற்றம் செய்து, இந்த மோசடியில் ஈடுபட்ட ஊர்மிளா ஸ்ரீதரை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊர்மிளா ஸ்ரீதரிடம் உள்ள தங்களது நிலத்திற்கான போலி ஆவணங்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வீட்டில் லீசுக்கு இருந்தவரை வெளியேற்றி பூட்டு போட்ட நடிகர் நாகேந்திர பிரசாத் - பூட்டை உடைத்த போலீஸ்!