திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிடும் ரவியை ஆதரித்து பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்," சுயசார்பு இந்தியா என்று கூறிவரும் மோடி மக்கள் நலனைப் புறக்கணித்து கார்ப்பரேட்டுகளையும் அந்நிய முதலீட்டாளர்களையும் சார்ந்திரும் நாட்டை உருவாக்கி வருகிறார். மாநில உரிமை, மக்கள் நலனைக் காப்பாற்ற முடியாத கட்சியாக அதிமுக உள்ளது. பாஜகவின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து அதிமுகவும் உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை தோற்கடித்து திமுக தலைமையிலான கூட்டணியை மக்கள் அமோக வெற்றிபெறச் செய்வார்கள்.
தமிழ்நாடு வந்த மோடி, பெண்கள் மீது அக்கறை இருப்பது போல பாசாங்கு செய்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் தனக்குள்ள பெரும்பான்மை பலத்தால் விவசாயிகளுக்கு எதிரான சட்ட திருத்த மசோதா, தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியது போல நீண்ட நெடும் காலமாக இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவாரா?, உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நடைபெற்ற சிறுமியின் வன்கொடுமை குறித்து பேசுவாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.