திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் சில தினங்களாக சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானை அங்கிருந்து நகர்ந்து மடத்துக்குளம் அமராவதி ஆற்றைக் கடந்து திண்டுக்கல் மாவட்டம் சாமிநாதபுரம் பகுதிக்குச் சென்றது. இதையடுத்து, தற்போது கண்ணாடிப்புதுாரில் உள்ள கரும்புத் தோட்டத்தில் தஞ்சம் அடைந்துள்ளது.
சின்னத்தம்பி யானை கடந்த இரு தினங்களாக கண்ணாடிப்புதூரில் உள்ள கரும்புத் தோட்டத்தில் தஞ்சமடைந்து, அங்குள்ள கரும்புகளைத் தின்றும், அருகில் தோட்டத்தில் உள்ள பயிர்களை உணவாக உட்கொண்டும் அங்கேயே சுற்றித்திரிந்து வருகிறது.
கரும்புத் தோட்டம் மற்றும் பயிர்களை தேசம் செய்வதால் விவசாயிகள் சின்னத்தம்பி யானையை வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்லுங்கள் என வனத் துறையினரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சின்னத்தம்பி யானையை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லும் முயற்சியில் கண்ணாடிப்புதுாரில் உள்ள கரும்புத்தோட்டத்திற்கு இன்று (பிப்.9) கலீம், மாரியப்பன் கும்கி யானைகள் வரவழைக்கப்படுகின்றன.
இதனிடையே, வனத் துறையினர் சின்னத்தம்பி யானையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.