திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 22ஆவது வார்டு, பவானி நகர் பகுதியில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாக்கடைக் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக கழிவுநீர் குளம்போல தேங்கியுள்ளதோடு, சாலையிலும் ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளில் இதேபோல் பலமுறை பிரச்னை ஏற்பட்ட நிலையில், மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்தினரிடம் மனுக்களை அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
போராட்டங்கள் நடத்தும்போது மட்டுமே அலுவலர்கள் வந்து பிரச்னையை சரி செய்வதாகக் கூறும் இவர்கள், நான்கடி ஆழம்வரை தேங்கியிருந்த சாக்கடை கழிவுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, பிரச்னையைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக போராட்டக்காரர்களிடம் மாநகராட்சி நிர்வாகிகள் கைப்பேசியில் தொடர்புகொண்டு உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.