திருப்பூர்: செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறும் போது, "காங்கிரஸில் பிரதமர் வேட்பாளரே அறிவிப்பது கிடையாது. காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர் கூடி பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள். இதற்கு முன்பு சோனியா காந்தி தான் பிரதமர் என்று அனைவரும் கூறினார்கள்.
ஆனால், மன்மோகன்சிங் தான் பிரதமரானார். சென்ற தேர்தலில் கூட ஸ்டாலின் அவர்கள் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறினார். ஆனால், காங்கிரஸ் அதைத் தீர்மானமாக நிறைவேற்றவில்லை. மேலும், மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் திருப்பூர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்திலிருந்து ரூ.4000 கோடி துணி வந்தடைந்திருக்கிறது. இது உள்நாட்டு வணிகர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் 12.6 சதவீதம் காங்கிரஸ் ஆட்சியில் வரி விதிக்கப்பட்டது. அதனால், வங்க தேச துணிகள் இந்தியாவிற்கு அதிகம் வரவில்லை. ஆனால், பாஜக வரி விதிக்காததால் வங்க தேச துணிகள் வருகின்றன.
மத்திய அரசு இதனைச் சரி செய்ய வேண்டும். மேலும், சீனாவிலிருந்து வருகிற பாலிஸ்டர் துணிகள் மூலம் பிரச்சனை எழுகிறது. பாலிஸ்டர் இங்கு அதிகளவில் கிடைப்பதில்லை ஏனென்றால் உற்பத்தி செய்பவர்கள் அதானி, அம்பானி வேறு யாருக்கும் உற்பத்தி வாய்ப்பு இல்லை. இதனால், பாலிஸ்டரால் வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இதனையும் சரி செய்யவேண்டும். விவசாயத்திற்கு அடுத்த படியாக, நெசவு தொழிலை அதிகமானோர் சார்ந்துள்ளனர். மத்திய அரசின் தவறான கொள்கையால் நெசவு தொழிலும் பாதிப்படைந்துள்ளனர். அதனைச் சரி செய்ய வேண்டும்" என்றார்.
கோயில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தது குறித்து கேள்விக்கு, "இந்து சமய அறநிலையத்துறை சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அரசு கையில் தான் உள்ளது. மன்னர் காலத்திலும் மன்னர் கையில் தான் கோயில்கள் இருந்தன. கோயில்கள் அரசுக் கட்டுப்பாட்டில் இருப்பது தான் சிறந்தது சேகர்பாபு சைவ பழம் போல் தெரிகிறார். ரூ.5000 கோடிக்கு மேல் கோவில் சொத்துக்களை மீட்டுள்ளார். இதற்கு நிர்மலா சீதாராமன் பாராட்ட வேண்டாமா.
ஆளுநர்க்கு மாலைக்கண் நோய் அதனால்தான் தமிழகத்தில் தீண்டாமை எனத் தெரிவிக்கிறார். சட்டமன்றத்தின் மூலம் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டுமா? உச்சநீதிமன்றம் சென்றுதான் நிறைவேற்ற வேண்டுமா? என்பதைத் தான் நாங்களும் கேட்கிறோம் தமிழக முதல்வர் சில நடவடிக்கைகள் தவறாக நடந்தால் அதனைத் திரும்பப் பெறுகிறார். திருவண்ணாமலை விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் திரும்பப் பெறப்பட்டது.
காவிரியை வைத்து கர்நாடகா பாஜக, தமிழக பாஜக அரசியல் செய்கிறார். ஈ.வி.கேஸ் இளங்கோவன் கூறிய கருத்து தொடர்பாக அவரிடம் பேசி சரி செய்வோம். பாஜக எதிர்க்கட்சி மாநிலத்தில் மட்டும் சோதனைகள் நடந்தால் அரசியல் காரணமே தவிர வேறு இல்லை. கடந்த தேர்தலைக் காட்டிலும் நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் இடங்கள் கேட்போம்.
தொழிற்சாலைகளில் சூரியசக்தி மின் உற்பத்திக்கு வரி விதிப்பது உலகம் முழுவதும் விதிக்கப்படுகிறது. என்ன தான் சூரியசக்தி மின் உற்பத்தி செய்தாலும் மின் வாரிய தடங்களைப் பயன்படுத்துவதால் வரி விதிக்கிறார்கள். கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு நடிகர் நடிகைகளை அழைத்தவர்கள் உலகக்கோப்பை வென்றவர்களை அழைக்கவில்லை. அந்த ஸ்டேடியம் சர்தார் வல்லபாய் படேல் பெயரிலிருந்தது. அதனை மோடி தன் பெயருக்கு மாற்றிக் கொண்டார். இது நில அபகரிப்பு போல ஸ்டேடியம் அபகரிப்பாக உள்ளது.
அமலாக்கத்துறை மணல் அள்ளும் விஷயத்தில் எந்த மாநிலத்திற்குச் சென்று சோதனை செய்தது. தமிழகத்தில் மட்டும் அமலாக்கத்துறை முனைப்புக் காட்டுவதன் நோக்கம் என்ன? அமலாக்கத் துறை பணப்பரிமாற்றத்தில் தான் கவனம் செலுத்த வேண்டும். மணல் பரிமாற்றத்தில் அல்ல. அமித்ஷா மகன் சொத்து மதிப்பு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஏன் அந்த பக்கம் செல்லவில்லை.
அமலாக்கத்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஒருவர் மட்டும் விடுதலை செய்யப்பட வில்லை என்றால் அவர் மீது தனிப்பட்ட வழக்கு ஏதேனும் நிலுவையில் இருக்க வாய்ப்பு உண்டு. 5 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும். தமிழகத்தில் அமோகமாக வெற்றி பெறும். ஆளுநர் வேண்டாம் என்றோ அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என்பதோ காங்கிரஸ் கருத்தல்ல. மரபை மீறக்கூடாது என்று தான் சொல்கிறோம். காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் அறிவிப்பது இல்லை. ஜனநாயக கட்சி நாங்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் தான் பிரதமர் குறித்து முடிவெடுக்கப்படும்." எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி எங்கு சென்றாலும் என்னைப் பற்றியே பேசுகிறார்.. உதயநிதி ஸ்டாலின் கூறியது என்ன?