திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே புது மார்க்கெட் வீதி, மங்கலம் சாலை, பூங்கா சாலை, பெருமாள் கோவில் வீதி என நான்கு சாலை சந்திப்பு (ஜங்ஷன்) உள்ளது. இந்த பகுதி மாநகராட்சியின் முக்கிய பகுதி என்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்தை கண்காணிக்க புறக்காவல் நிலையம் அமைத்து போலீசார் பணியாற்றி வந்தனர். இந்த பகுதியில் சுற்றித்திரிந்த குட்டி நாய் ஒன்று புறக்காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து. அந்த நாய்க்கு அன்பு காட்டிய போலீசார் தினந்தோறும் அதற்கு உணவு வழங்கி வந்தனர். போலீசார் மத்தியில் வெள்ளையன் என்று அந்த நாய்க்கு பெயர் வைத்து அழைத்து வந்தனர்.
தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளையன் காவல் நிலையத்தில் வளர்ந்தது. எப்போதும் காவலர்களுடன் சுற்றித்திரியும் வெள்ளையன், போக்குவரத்து சிக்னலில் யாராவது போலீசாரை எதிர்த்து பேசினாலோ, போக்குவரத்து விதிகளை பின்பற்றவில்லை என்றாலோ அவர்களை ஒரு வழி செய்துவிடும்.
இப்படி திருப்பூரில் போலீசாருக்கு உதவியாக அவர்களுடனேயே சுற்றி திரிந்து வந்ததால் அங்கிருந்த சிக்னல் பணிக்கு வரும் போலீசார், புறக்காவல் நிலைய பணிக்கு வரும் போலீசார் என அனைத்து போலீசாரும் வெள்ளையன் மீது பாசமாக இருந்தார்கள். கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரி இல்லாமல் இருந்த வெள்ளையனுக்கு உதவி கமிஷனர் உள்ளிட்ட போலீசார் சொந்த செலவில் சில ஆயிரங்களை செலவழித்து மருத்துவம் கூட பார்த்தனர்.
இன்று அந்தப் பகுதியில் சென்ற வாகனம் ஒன்று போலீசாரின் பாசக்கார நாய் வெள்ளையன் மீது மோதியதில் அது பரிதாபமாக உயிரிழந்தது. இதனை அறிந்த போலீசார் வேதனை அடைந்தனர். தொடர்ந்து தங்களுடன் நான்கு ஆண்டுகளாக பயணித்த வெள்ளையன் இல்லாததால் சோகமடைந்த போலீசார் அதற்கு இறுதி மரியாதை செய்ய தீர்மானித்தனர். அதன்படி புறக்காவல் நிலையம் அருகிலேயே குழி தோண்டி வெள்ளையன் உடலுக்கு இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் திருப்பூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பல்லடம் கொலை வழக்கு.. முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவரின் தந்தை கைது!