திருப்பூர்: கோவை, திருப்பூர், ஈரோடு சேலம் ரயில் வழித்தடத்தில் வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெற்று வந்த மெமு(MEMU) ரயில் ஒன்றை ஓராண்டாக ரயில்வே நிர்வாகம் ரத்து செய்து இருப்பது பொதுமக்கள், தொழிலாளர்களை பெரும் அவதிக்குள்ளாக்கி இருக்கிறது. இதே வழித்தடத்தில் மேலும் இரு ரயில்களின் நேரத்தை மாற்றியும், நின்று செல்லக்கூடிய ரயில் நிலையங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதன் மூலமாக பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு மாநகரங்கள் தொழில் வளர்ச்சி பெற்ற நகரங்களாக இருக்கின்றன. அதிலும் திருப்பூர் மாநகரத்தின் பனியன் தொழிலை நம்பி, சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளியூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். இதில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் திருப்பூருக்கு பக்கத்தில் உள்ள கோவை, ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி திருப்பூருக்கு வந்து செல்லும் தொழிலாளர்கள் ஆவார்கள்.
இப்படி திருப்பூருக்கு பல்வேறு ஊர்களில் இருந்து தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வந்து செல்வதற்கு பேருந்து மற்றும் ரயில்களை பயன்படுத்துகின்றனர்.
மெமு ரயில் சேவை நிறுத்தம்: குறைந்த கட்டணத்தில் இருப்பதாலும், உடல் அசதி குறைவாக இருப்பதாலும், ரயில் பயணம் திருப்பூருக்கு வரும் பக்கத்து மாவட்டத்துக்காரர்களின் முக்கிய தேர்வாக இந்த ரயில் பயணம் இருக்கிறது. இப்படி திருப்பூர் நோக்கி வரக்கூடிய தொழிலாளர்கள், வந்து செல்வதற்கு மிகப்பெரிய போக்குவரத்து வசதியாக இருந்த பயணிகள் மெமு எக்ஸ்பிரஸ் ரயில் (MEMU train service) ஒன்றை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்து இருக்கிறது.
மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக செல்லக்கூடிய நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (Nagercoil Express -16610) மற்றும் திருச்சி - பாலக்காடு ரயில்களின் (Trichy Palakkad Train) நேரத்தை மாற்றி அமைத்து இருப்பதும் பயணிகளுக்கு பெரும் அலைச்சலையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி இருக்கிறது.
பயணிகளின் பேராதரவு பெற்ற ரயிலாக இருந்த இந்த மெமு ரயிலானது, ரயில் எண் 06802 என்ற எண்ணில் கோவையில் இருந்து காலையில் 9.05 மணிக்கு கிளம்பி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. மறு மார்க்கமாக 06803 என்ற எண்ணுடன் சேலத்தில் மதியம் 1.40 மணிக்கு சேலத்தில் கிளம்பி மாலை கோவையை மீண்டும் அடையும்.
22 ரயில் நிலையங்களில் சேவை: இந்த ரயில்தான் கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக சேலம் வரை உள்ள அனைத்து சின்னஞ்சிறு ரயில் நிலையங்களிலும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்ற ரயிலாகும். இந்த ரயிலில்தான் கோவை ஜங்சன், கோவை வடக்கு, பீளமேடு, சிங்கநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், வஞ்சிபாளையம், திருப்பூர், ஊத்துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டிபாளையம், ஈரோடு ஜங்சன், காவேரி, அனங்கூர், சங்கரி துர்க், மாவெலிபாளையம், மகுடஞ்சாவடி, வீரபாண்டி ரோடு, சேலம் ஜங்சன் என 22 ரயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்று கொண்டிருந்தது.
கேரளாவிற்கு மட்டும் ரயில் சேவை எதற்கு?: இந்த ரயில் மூலமாக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டம் வரை தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பயனடைந்து வந்தனர். அதிலும் சீசன் டிக்கெட் மூலமாக குக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெருமளவு பயன்படுத்தி வந்த இந்த ரயிலை ஒரு ஆண்டாக தொடர்ச்சியாக ரத்து செய்து வைத்திருக்கிறது தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் (Salem Division of Southern Railway). அதே நேரம், இந்த ரயில் அதே அளவு பெட்டிகளுடன் கோவையில் இருந்து கேரளத்துக்கு மட்டும் இயங்குவதோடு, தமிழ்நாட்டில் ரத்து செய்து வைத்திருப்பதுதான் சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களிடத்தில் கேள்வியையெழுப்பி இருக்கிறது.
அதாவது இந்த மெமு ரயிலானது, சேலத்தில் இருந்து கோவை வந்து சேர்ந்ததும், 06805 என்ற எண்ணில் கோவையில் இருந்து பாலக்காடு வரை பாசஞ்சர் ரயிலாக (Coimbatore To Palakkad) இயக்கப்பட்டு வந்தது. 06806 என்ற எண்ணில் பாலக்காட்டில் இருந்து கோவைக்கும் பின்னர், அங்கிருந்து கோவை - சேலத்துக்கு இயக்கப்பட்டு வந்தது. ஆனால், கோவை - சேலம் இடையே ஒரு ஆண்டாக ரத்து செய்யப்பட்ட இந்த ரயில், கேரள பயணிகளுக்கு எந்தவித சிக்கலும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கேரள பகுதிகளில் மட்டும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக பொதுமக்களும் மற்றும் ரயில் பயணிகளும் புகார் கூறுகின்றனர்.
ரயில் சேவை ரத்துக்கு காரணமென்ன?: 06802 மற்றும் 06803 என்ற எண்களில் இயங்கக்கூடிய இந்த ரயிலை ரத்து செய்ததற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கிற ஒரே காரணம் என்னவென்று கேட்டால், 'தண்டவாள பராமரிப்பு பணி' என்பது மட்டுமே. கேரளத்தையும், தமிழ்நாட்டையும் இணைக்கக்கூடிய மேற்கு மண்டல ரயில்பாதையில் தண்டவாள பராமரிப்பு என்ற துக்கடா காரணத்தை கூறி, ஒவ்வொரு மாதமும் இந்த ரயிலை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்து அறிக்கையை அனுப்புகிறது. இப்படி ஒரு ஆண்டாக செய்யக்கூடியதற்கு பின்னணி காரணம்? என்று பொதுமக்கள் கூறும் காரணங்கள் தான் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.
ரயில் சேவை நின்றதற்கு பேருந்து உரிமையாளர்கள் காரணமா?: இந்த ரயில் தடத்தில் தினமும் பயணிகள் செல்லக்கூடிய 30-க்கும் மேற்பட்ட ரயில்களும், இது தவிர சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டாலும், தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு கரோனா காலத்தில் இந்த மெமு ரயில் ரத்து செய்யப்பட்டபோது, வருமானம் குவிந்தது. எனவே, அவர்கள் இந்த ரயிலை தொடர்ச்சியாக ஓட விடக்கூடாது என்று முடிவு செய்து, இதற்காக, ரயில்வே அதிகாரிகளை சரிக்கட்டி இந்த ரயிலை ரத்து செய்ய வைப்பதாக திருப்பூரை சேர்ந்த பயணிகள் கூறுகின்றனர்.
அதேநேரம், இன்னும் சில பயணிகள் எழுப்பும் கேள்வி நியாயமாகத்தான் இருக்கிறது. கோவையிலிருந்து பாலக்காடு வரை இந்த மெமு ரயிலை இருமார்க்கத்திலும் இயக்கப்படுவதில் எந்த பிரச்னையும் இல்லை என்று ரயிலை இயக்குகிறார்கள். அதேபோல கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழித்தடத்திலும் பல்வேறு ரயில்கள் தடையின்றி இயக்கப்படுகிறது. ஆனால், ரயில் தண்டவாள பராமரிப்பு பணி என்று சொல்லி இந்த மெமு ரயிலை மட்டும் ரத்து செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த ரயிலை இயக்க வேண்டி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் ஆகியோரும் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்ட ரயில் பயணிகளும் மனுமேல் மனு கொடுத்துப் பார்த்தும் அசரவில்லை ரயில்வே நிர்வாகம்.
எக்ஸ்பிரஸாக மாறிய ரயிலால் தவிக்கும் ரயில் பயணிகள்: இதேபோல, திருச்சியிலிருந்து பாலக்காடு செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலானது கோவை - திருப்பூருக்கு இடையே இருகூர், சிங்கநல்லூர் ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. இத்துடன், கோவை - நாகர்கோவில் பாசஞ்சர் ரயிலானது காலை 7.20 மணிக்கு கோவையில் புறப்பட்டு வடகோவை, பீளமேடு, சிங்கநல்லூர், இருகூர், சூலூர், சோமனூர், வஞ்சிபாளையம் வழியாக திருப்பூர் நின்று பின்னர் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. ஆனால், இந்த ரயில் இப்போது கடந்த 2 வருடங்களாக எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டு உள்ளது.
மாணவர்களும் தொழிலாளர்களும் பாதிப்பு: இதனால் கோவை, திருப்பூருக்கு இடையே சிங்கநல்லூர், இருகூர், வஞ்சிபாளையம் ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்கிறது. இதனால், இந்த ரயிலில் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வந்த மாணவர்கள், வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக பயணித்து வந்த பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், இந்த ரயில் மாலை நேரத்தில் 7.20 மணிக்கு திருப்பூர் வந்துகொண்டு இருந்தது. தற்போது 5.10 மணிக்கு வரும்படி அட்டவணை மாற்றியுள்ளதும் தொழிலாளர்கள் வேலை முடித்து செல்வதில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே, 4.50 கிளம்பக்கூடிய பாலக்காடு - திருச்சி ரயிலுக்கு அடுத்த 10 நிமிடத்திலேயே கிளம்புமாறு கோவை - நாகர்கோவில் பாசஞ்சர் ரயில் நேரத்தை மாற்றி அமைத்துள்ளதால், அதில் யாரும் ஏறிச்செல்ல முடியாத நிலைதான் ஏற்பட்டிருக்கிறது.
ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை: இவ்வாறு தண்டவாள பராமரிப்பு பணி என்று சொல்வதோடு, பல்லாயிரம் மக்களை அலைக்கழிக்கும் போக்கை ரயில்வே நிர்வாகம் கையில் எடுத்துள்ளதாக ரயில் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆகவே சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக சென்று பல்லாயிரம் கிராம மக்களுக்கு பயனளித்த இந்த ரயிலை உடனடியாக இயக்கத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதே மேற்கு மண்டலத்தில் பயணிக்கும் ரயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. மேலும், கோவை - நாகர்கோவில் ரயில் மற்றும் திருச்சி - பாலக்காடு ரயில்களை ஏற்கனவே நின்று சென்ற அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன உளைச்சல தரும் பயணமும் அதிக செலவும்: இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய லதா கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக சிங்காநல்லூரிலிருந்து திருப்பூருக்கு வந்து செல்வதற்கு சேலம் பாசஞ்சர் ரயில் மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும், இந்த நிலையில் கரோனாவால் இந்த ரயில் சேவையை மட்டும் நிறுத்துவிட்டதாக கூறினார். இதே வழித்தடத்தில் அனைத்து ரயில்களும் இயங்கும்போது, ரயில் தண்டவாளம் பராமரிப்பு எனக் காரணம் கூறுவது சரியாக இல்லை என்றும், இவ்வாறு தினமும் பேருந்தில் பயணிப்பதால் உடல் அசதியும், பயண செலவும் அதிகரிப்பதால், மீண்டும் கோவை - திருச்சி பாசஞ்சர் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை to திருப்பூர் நின்றபடியே பயணம்: இது குறித்து பேசிய விஜயலட்சுமி, மாதம் ரூ.300 பயணத்திற்கு மட்டும் செலவு செய்து கோவையிலிருந்து திருப்பூர் வந்து செல்வதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், பேருந்துகளில் மிகவும் கூட்டமாக இருப்பதாகவும், நிற்பதற்கு கூட இடமின்றி மிகுந்த சிரமத்தோடு திருப்பூர் வரை செல்வதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆகவே, மீண்டும் கோவை - சேலம் பாசஞ்சர் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு அவர் கோரிக்க விடுத்துள்ளார்.
எல்லா ரயில்நிலையங்களிலும் நிற்க கோரிக்கை: இவரைத்தொடர்ந்து பேசிய லீமா, திருச்சி - பாலக்காடு ரயில், நாகர்கோவில் பாசஞ்சர் ரயில், சேலம் பாசஞ்சர் ஆகிய மூன்று ரயில்களும் சிறப்பாக ஓடிகொண்டிருந்த நிலையில், இவற்றின் பயண நேரத்தை மாற்றியமைத்தும், பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்வதாலும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்தார். எனவே, முன்பு இருந்ததைப் போல, மீண்டும் இவ்வழித்தடங்களில் ரயில் சேவை தொடங்கவும், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்கள் நின்று செல்லவும் நடவடிக்கை எடுத்தால், நீண்ட தூரத்திற்கு வேலைக்கு செல்லும் பெண் பயணிகளுக்கு பயன் தரும் என்பதை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கேரளாவிற்கு மட்டும் தங்குதடையில்லா சேவை; தமிழ்நாட்டில்?: இது குறித்து பேசிய வரதராஜ் கூறுகையில், நாகர்கோவில் பாசஞ்சர் ரயில், சேலம் பாசஞ்சர் ரயில் ஆகியவற்றை நம்பி தினமும் 1500-க்கும் அதிகமான ரயில் பயணிகள் உள்ளதாகவும், இவற்றை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றியதோடு பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர் ஆகிய இடங்களில் நிற்காமல் செல்வதாகவும் கூறினார். கேரளாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் ரயில்கள் அனைத்தும் எவ்வித பிரச்னையும் இல்லாமல் செல்லும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இவ்வாறு குழறுபடி என்று கேள்வியெழுப்பினார்.
மேலும் இவரைப் போல, சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை மாற்றி தருமாறும், மீண்டும் மெமு ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்றும் பலரும் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இவைகளை கருத்தில் கொண்டு, சேலம் கோட்டம் தெற்கு ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிகளின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகும்.
இதையும் படிங்க: மத போதகர் மீது தாக்குதல்: திமுக எம்.பி.க்கு வந்த ஓலை - பரபரப்பான பின்னணி?