திருப்பூர் மாவட்டம் பிச்சம்பாளையத்தை அடுத்த பூம்பாறை டாஸ்மாக் கடையின் பின்புறம் நான்கு பேர் கொண்ட கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக அனுப்பர்பாளையம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காவல் ஆய்வாளர் ராஜன் தலைமையில், காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அந்த கும்பலை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களைப் பிடித்து நடத்திய விசாரணையில், கேரள மாநிலம் கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்த ராஜு (35), தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (32), திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த சிவன்மலையைச் சேர்ந்த ஆனந்தபாபு (29), புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த முருகேசன் (31) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இந்த நான்கு பேரும் தற்போது திருப்பூரில் பாண்டியன் நகர், காமாட்சி அம்மன் கோயில் சாலை, வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வந்துள்ளனர். மேலும், இந்த கும்பல் ஆந்திராவில் இருந்து அவிநாசி வழியாக கஞ்சாவை மொத்தமாக வரவழைத்து, பின்னர் அதை பொட்டலங்கள் போட்டு திருப்பூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ராஜு, செல்வகுமார், ஆனந்தபாபு, முருகேசன் ஆகிய நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த நான்கு கிலோ 400 கிராம் எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: தொடர் திருட்டு சம்பவம்; ஒருவர் கைது; மேலும் ஒருவருக்கு வலைவீச்சு!