கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரையில் மூன்று கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு அறிவித்த மண்டல வாரியான லிஸ்டில் உள்ள பச்சை, ஆரஞ்சு மண்டலங்களுக்கு சில தளர்வுகள் வழங்கப்பட்டன.
அந்தவகையில், ஆரஞ்சு மண்டலத்திலிருக்கும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் உரிய நிபந்தனைகளுடன் 50 சதவீத தொழிலாளர்களைக் கொண்டு மே 6ஆம் தேதி முதல் பணியைத் தொடங்கலாம் என, அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
அதன்படி திருப்பூரில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கின. இதில், கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல், அடிக்கடி கைக்கழுவுதல் குறித்தும் தொழில் நிறுவனங்கள் சார்பில் தொழிலாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி அரசு அறிவுறுத்தல் படி, ஒவ்வொரு நிறுவனங்களிலும் குறைந்தது 30 முதல் 50 சதவீத தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பல நாள் முடக்கத்திற்குப் பின் பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட தொடங்கியுள்ளது நம்பிக்கை அளிப்பதாக தெரிவிக்கின்றனர். 40 நாட்களுக்கு மேலாக பணியின்றி இருந்த தொழிலாளர்கள் தற்போது பணிக்குத் திரும்பியுள்ளதால் மீண்டும் திருப்பூர் தன் இயல்பு நிலையை விரைவில் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க...பல ஆண்டுகளாக அக்கறையில்லாமல் இருக்கும் அரசு... சொந்த செலவில் சாலை அமைத்த கிராமம்...!