7ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக்கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு திறக்கப்படும் மதுபானக் கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி குறைந்தது 6 அடியாவது இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது.
இவற்றுடன், குடைகளையும் சேர்த்து கொண்டு வர வேண்டும் என்ற புதிய நிபந்தனையை திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் விதித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் வாங்க வருபவர்கள் கட்டாயம் குடையுடன் வர வேண்டும் என்றும், வராதவர்களுக்கு மதுபானங்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும் என்றும் இத்தகைய நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.