பின்னலாடை ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு 35ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி ஈட்டித் தரும் நகரமாக திருப்பூர் திகழ்கிறது. அதேபோல் உள்நாட்டு பின்னலாடை தேவையில் ரூ.8,000 கோடி அளவுக்கு வர்த்தகம் நடக்கும் நகரமாகவும் இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்நகரில் ஏராளமான தென் மாவட்டத் தொழிலாளர்களும், வடமாநிலத் தொழிலாளர்களும் பணிபுரிந்து வந்தனர்.
தற்போது, கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பின்னலாடை தயாரிப்பு, சாயம் ஏற்றுதல், ஸ்பின்னிங் மில்கள், அது சார்ந்த உப தொழில்களில் ஈடுபட்டுவந்த 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து வீடுகளில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு மீண்டும் உற்பத்தி தொடங்கியபோதும், பொதுப் போக்குவரத்து வசதி இல்லாததால் திருப்பூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லமுடியவில்லை.
மேலும் இ-பாஸ் நடைமுறைச் சிக்கல்களால் வெளியூரிலிருந்து தொழிலார்கள் பணிக்கு வரமுடியாத நிலை உள்ளது. இதனால் 40 விழுக்காடு ஆட்களை கொண்டே பணிகள் நடைபெற்று வருவதாக பனியன் நிறுவன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிந்த வட மாநில தொழிலார்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டதால் உற்பத்தி முடங்கியது. திருப்பூர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தில் பணிக்கு வந்து செல்கின்றனர்.
இருசக்கர வாகனத்தில் வந்து செல்லும் தொழிலார்களும், வாங்கும் சம்பளத்தில் பாதிக்கு மேல் பெட்ரோலுக்கே சென்றுவிடுகிறது என வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து தொழில்துறையினர் கூறுகையில், "கடந்த 4 மாதத்திற்கு பிறகு தற்போது தான் பின்னலாடை நிறுவனம் இயங்க துவங்கியுள்ளது. ஆனால் தற்போது, மீண்டும் கரோனா தனது ஆதிக்கத்தை காட்டி வருகிறது. திருப்பூரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக தொழிலார்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. வடமாநில தொழிலார்கள் இல்லாத நிலையில், போகுவரத்து இல்லாததால் உள்ளூர் தொழிலார்களும் பணிக்கு வர முடியாத நிலை உள்ளது. மேலும், வெளி மாவட்டத் தொழிலார்கள் மீண்டும் பணிக்கு வர விரும்பும் நிலையில், இ-பாஸ் நடைமுறைகளால் அவர்களும் வருவது கேள்விக்குறியாகியுள்ளது.
ரயில் போக்குவரத்து துவங்கும் வரை வடமாநில தொழிலார்கள் இங்கு வர முடியாது. அதே சமயம் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்தல் மட்டுமே வெளிமாவட்ட தொழிலார்கள் பணிக்கு வரமுடியும். மேலும் மண்டல அளவில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளித்தால் கூட திருப்பூரை சுற்றியுள்ள தொழிலார்கள் பணிக்கு திரும்பவ நல்வாய்ப்பாக அமையும், இதன் மூலம் பின்னலாடை தொழிலும் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் என்பதில் ஐயமில்லை" என்கின்றனர்.
இதையும் படிங்க: பின்னலாடைத் துறையில் சீனாவை விஞ்சுமா இந்தியா?