ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. குடிமகன்கள் மது கிடைக்காமல் தள்ளாடிவருகின்றனர்.
இதனால், சட்டவிரோதமாக ஆங்காங்கே சமூகவிரோதிகள் கள்ளச்சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்றுவருகின்றனர். இதேபோல், திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலும் அதிக அளவில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகக் காவல் துணைக் கண்காணிப்பாளருக்குப் புகார் வந்துள்ளது.
இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகவேல் உத்தரவின்படி காமநாயக்கன்பாளையம் காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், வலையபாளையம் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாகத் தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு, கள்ளச்சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த செந்தில், ராமசாமி, பாப்பன் ஆகிய மூவரும் காவல் துறையினரைக் கண்டு தெரித்து ஓடினர். பின்னர், அவர்களை மடக்கிப் பிடித்த காவல் துறையினர் அவர்களிடமிருந்த 50 லிட்டர் ஊறல், 10 லிட்டர் சாராயம் ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர்.
பின்னர், மூவரையும் கைதுசெய்த காவல் துறையினர், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தர்மபுரியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவர்கள் 183 பேர் கைது!