திருப்பூர்: கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா ஆர்.பொன்னாபுரம் சத்யராஜ் நகரைச் சேர்ந்தவர் குமார் (25). நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவர், தனது பெரியப்பா செங்கோட்டை (55) என்பவரை அழைத்துக் கொண்டு, ஊசி பாசி போன்ற பேன்சி பொருட்களை விற்பனை செய்வதற்காக, நேற்று மதியம் பொள்ளாச்சியில் இருந்து உடுமலையில் உள்ள தாந்தோணி கிராமத்துக்கு வந்துள்ளனர்.
அப்போது குமாரபாளையம் பிரிவு அருகே இருவரும் சென்றபோது, புதரின் அருகே காடை பதுங்கி இருப்பதைக் கண்ட இருவரும் உண்டி வில்லைப் பயன்படுத்தி அதை வேட்டையாட முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது, உண்டி வில்லில் இருந்து புறப்பட்ட கல், எதிர்பாராத விதமாக அருகில் இருந்த தோட்டத்தில் விழுந்துள்ளது.
கல் விழுந்ததில் தோட்டத்தில் இருந்த சேவல்கள் அலறிய சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த தாந்தோனியைச் சேர்ந்த செல்வகுமார் உள்ளிட்ட மூன்று பேர், குமார் மற்றும் செங்கோட்டை ஆகிய இருவரும் சேவல்களை திருட வந்ததாக நினைத்து, தென்னை மரத்தில் கட்டி வைத்தாக கூறப்படுகிறது.
பின்னர், தேங்காய் மட்டை மற்றும் கட்டையைப் பயன்படுத்தி இருவரையும் சரமாரியாக தாக்கியதாகத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, நேற்று மாலை 5 மணியளவில் அவர்கள் இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த செங்கோட்டையை, குமார் மோட்டார் சைக்கிளில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது சேரன் நகர் அருகே வந்தபோது செங்கோட்டை திடீரென மயக்கம் அடைந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு செங்கோட்டையை கொண்டு சென்றுள்ளனர். செங்கோட்டையைப் பரிசோதித்த மருத்துவர்கள் செங்கோட்டை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அதே மருத்துவமனையில் குமார் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள், உடுமலை அரசு மருத்துவமனையில் கூடியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. அதைத் தொடர்ந்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செங்கோட்டை உடல், உடற்கூராய்விற்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து குமார் அளித்த புகாரின் பேரில், உடுமலை போலீசார் செல்வகுமார் உள்ளிட்ட மூன்று பேர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், தாந்தோணி கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை என்ற செல்வகுமார் (33),சசிகுமார் (39), செல்லதுரை (25) உள்ளிட்ட மூவரை உடுமலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: காசநோய் தடுப்பூசியால் குழந்தை உயிரிழப்பா? ஆரம்ப சுகாதார நிலையத்தை அடித்து நொறுக்கிய உறவினர்கள்!