கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகவே, மக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் எனவும் அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று (ஜூன் 6) ஞாயிற்றுக்கிழமை என்பதால், திருப்பூரில் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாக மீன்களை வாங்கிச் சென்றனர். மக்களைக் கட்டுப்படுத்த தன்னார்வலர்களும், காவல் துறையினரும் அவ்விடத்தில் இல்லாததால் கடை உரிமையாளர்களும் கண்டுகொள்ளவில்லை.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்ன் எண்ணிக்கை 114இலிருந்து பூஜ்ஜியமாகி பச்சை மண்டலமாக இருக்கும் திருப்பூரில், மக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.