திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருபவர் ராம். இவர், நேற்று முன்தினம் (செப்டம்பர் 9) வியாபாரம் முடிந்து வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். இதைத் தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 10) காலை மீண்டும் கடையை திறக்க வந்த ராம், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளிருந்த தொலைக்காட்சி பெட்டி, ஹோம்தியேட்டர் மற்றும் கோழிகள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெருமாநல்லூர் காவல்துறையினர், கடையிலிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அதிகாலையில் அடையாளம் தெரியாத ஒருவர், கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் பணத்தைத் தேடியுள்ளார். ஆனால் அதில் பணம் இல்லாததால், கடையிலிருந்து தொலைக்காட்சி பெட்டி, ஹோம்தியேட்டர் மற்றும் கோழிகளை திருடிச்செல்வது பதிவாகியுள்ளது. மேலும், காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளி பெருமாநல்லூர் பகுதியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த அஜித் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, இறைச்சிக் கடைக்கு பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் அஜித் மறைந்திருந்ததை கண்ட காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்நபர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அதேசமயம் கடையில் திருடிச்சென்ற பொருள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:நிலத்தகராறில் விவசாயி கொலை - இருவர் கைது