திருப்பூர்: கடந்த மாதம், 13ம் தேதி காசியிலிருந்து ராமேஸ்வரம் வந்த இரு அகோரிகள், பயணத்தின் இடையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தங்கி இருந்தனர். இதனை அறிந்த காங்கேயம் நகராட்சி 2வது வார்டு பா.ஜ.க பொறுப்பாளர் அசோக், 2வது வார்டு தி.மு.க., பொறுப்பாளர் சரவணன் ஆகியோர் அகோரிகளை காங்கேயம் நகராட்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, நகராட்சி அலுவலகத்துக்குள் அகோரிகள் நிர்வாண கோலத்தில் வந்ததைப் பார்த்து, அங்கிருந்த பெண் பணியாளர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறினர். தொடர்ந்து, அங்கு ஆணையர் வெங்கடேசன், கார் டிரைவர், வருவாய் ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் அகோரிகளிடம் ஆசீர்வாதம் வாங்கினர்.
பின்னர் வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், நகராட்சி ஆணையரின் கார் ஓட்டுநர் மற்றும் திமுகவைச் சேர்ந்த சரவணன், பாஜகவைச் சேர்ந்த அசோக் உள்ளிட்டோர் அகோரிகளுடன் நகராட்சி அலுவலகத்திற்குள் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன்பின், அகோரிகள் கிளம்பிச் சென்றனர்.
காங்கேயம் அலுவலகத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி நகராட்சி பணியாளர்கள் மற்றும் தி.மு.க., - பா.ஜ. நிர்வாகிகள் ஆகியோர் அகோரிகளிடம் ஆசி பெற்று புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அரசு அலுவலகத்திற்குள் பணி நேரத்தில், கட்சி நிர்வாகிகள், நிர்வாண நிலையிலிருந்த அகோரிகளை அழைத்துச் சென்றது காங்கேயம் பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.