திருப்பூரில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் 'நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்' என்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர், "இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பாக நாடு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக திருப்பூரில் நடந்தது. நாம் உண்ணும் உணவு சத்தானதாக, உடலுக்கு நன்மை தரக் கூடியதாகவும் இருத்தல் மிகவும் அவசியம்.
சரியான நேரத்தில் சரியான உணவினை உட்கொள்ள வேண்டும். கரோனா வைரஸ் போன்ற தற்போதைய சூழ்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் உணவை உட்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
மேலும் சத்தான சரிவிகித, தரமான உணவு பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே கொண்டு சேர்ப்பது நம் அனைவரின் கடமை என இந்த நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது. பாரம்பரிய அரிசி ரகங்கள் வகைப்படுத்தப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
அதேபோல் சிறு தானியங்களால் செய்யப்பட்ட உணவு வகைகள் நன்மை பயக்கும் என்பது காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், உணவுப் பாதுகாப்புத் துறையின் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது" என்றார்.
இதில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை, நுகர்வோர் அமைப்பினர், உணவக உரிமையாளர், சங்கப் பிரதிநிதிகள், உணவு வணிகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'உணவு பழக்கவழக்கம் 2020' - புதுச்சேரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி