துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய மாநாட்டில், ராமர் சீதை படங்கள் ஆடையில்லாமல் எடுத்து வரப்பட்டு செருப்பால் அடிக்கப்பட்டது எனப் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென திராவிட இயக்கத்தினர் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், பெரியார் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் வதந்தியை பரப்பி வருகிறார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தினர் இன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் விடுதலை கழகத்தினர், ராமன் சீதை ஆகியோர் உருவங்கள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். பெரியார் மீது மக்கள் கொண்டிருக்கிற நல்லெண்ணத்தை சிதைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வதந்தியை பரப்பி அமைதியை சீர்குலைக்கப் பார்க்கிறார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 மற்றும் 505 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்ததாக கூறினர்.
இதையும் படிங்க: பள்ளிக்குச் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு புகார்: விரைவில் நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவு!