திருப்பூர்: மடத்துக்குளம் தாலூகா, மைவாடி ஊராட்சி ராஜாவூர் கிராமத்தில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி பட்டியலின நபர் ஒருவர் மீது வன்கொடுமைத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டும், பல்வேறு தரப்புகளில் மனு அளித்தும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், கடந்த டிச.24ஆம் தேதி அன்று உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காகப் போராடும் அமைப்புகளின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்த நிலையில், மாவட்ட நிர்வாகம் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து சமுதாய மக்களையும் அழைத்துச் சென்று, ராஜகாளியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்வில் ததீஒமு உள்ளிட்ட பட்டியல் பழங்குடியினருக்காகப் போராடும் அமைப்புகள் சார்பில் யாரும் பங்கேற்காததால், பொதுமக்களுக்கு திருப்தி இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பட்டியல் பழங்குடியினருக்காகப் போராடும் அமைப்புகளின் சார்பில், ராஜாவூர் கிராமத்தில் உள்ள கோயிலில் வழிபடவும், பொதுப் பாதையில் காலில் செருப்பு அணிந்து நடக்கவும் முடிவு செய்து உறுதி செய்யும் வகையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் சி.கே.கனகராஜ் தலைமையில், மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு முன்னிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பேரணியாக பொதுப் பாதையில் காலில் செருப்பு அணிந்து சென்றனர்.
பின்னர், கோயிலுக்கு உள்ளே சென்று வழிபட்டுள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு அணிந்து செல்ல முடியாத வீதியில் செருப்பு அணிந்து சென்றதாக அப்பகுதி பட்டியலின மக்கள் தெரிவித்தனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தொழிற்சங்க மையம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிட கழகம், இந்திய தொழிற்சங்க மையம், ஆதித்தமிழர் சனநாயகப் பேரவை, திராவிடர் தமிழர் கட்சி, ஆதித்தமிழர் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், ஆதித்தமிழர் மக்கள் முன்னனேற்றக் கழகம், ஆதித்தமிழர் பேரவை, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, “வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளை உடனே காவல்துறை மூலம் கைது செய்ய வேண்டும். வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவர் பட்டா இல்லாத புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வருவதால், உடனே வருவாய்த்துறை மூலம் பட்டா வழங்க வேண்டும். மடத்துக்குளம் தாலுகா முழுவதும் பிரிவு மூலம் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: கரூரில் வாடகை பாக்கி காரணமாக டாஸ்மாக் பாரை பூட்ட சென்ற அதிகாரிக்கு பார் உரிமையாளர்களுக்கு இடையே வாக்குவாதத்தால் பரபரப்பு..!