தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், "கொங்கு மண்டலத்தில் இரண்டு நாட்களாக கிடைத்த வரவேற்பிற்கு நன்றி. வரலாற்று சிறப்பு மிக்க நகரம் தாராபுரத்திற்கு வருவதில் மகிழ்ச்சி. சேர, சோழ மன்னர்களை நிறைவாக பெற்ற மண் இது.
வேற்றுமையில் ஒற்றுமை, கலாசாரங்கள் மீதான மரியாதை நாட்டின் அடித்தளம். தமிழ் கலாசாரத்தை பிரதமர் மோடி அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். பாஜக, ஆர்எஸ்எஸ் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே நாடு என்று கூறிக்கொண்டு வருகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழைகளின் முதுகெலும்பை உடைத்தார் பிரதமர் மோடி. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான தொழில்கள் அழிந்தே போயின.
தமிழ்நாட்டில் இருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளை பாஜக அரசு சிதைத்துள்ளது. கரோனா வந்தவுடன் மோடி அவரது 5 பணக்கார நண்பர்களின் 10 லட்சம் கோடியை ரத்துசெய்தார். ஆனால் மக்களுக்கான கடன்கள் ரத்து செய்யவில்லை. 'மேக் இன் இந்தியா' உண்மை எனில் ஜி.எஸ்.டி வரியை ஏன் கொண்டு வந்திருக்க வேண்டும்.
சீன ராணுவம் நமது இடத்தை ஆக்கிரமிப்பு செய்துகொண்டு இருக்கின்றது. பிரதமர் மோடி பலவீனமானவர் என்பதை சீன நாட்டினர் புரிந்துகொண்டனர். இதனால் தைரியமாக நமது நாட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கின்றனர்.
தமிழ்நாட்டு அரசை பிளாக் மெயில் செய்வதுபோல, தமிழக மக்களையும் மிரட்டி விடலாம் என மோடி நினைகின்றார். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தமிழக இளைஞர்கள்தான் முடிவு செய்வார்கள்.
மக்கள் நலன் சார்ந்த அரசை உருவாக்கவே நான் உதவுகிறேன். மக்கள் நலன் சார்ந்த அரசை அவர்களால் மிரட்ட முடியாது. உங்களுடனான என் உறவு அரசியல் உறவல்ல; இது குடும்ப உறவு. இது அன்பால், கருணையால் ஏற்பட்ட உறவு. தமிழ் மொழியின் பெருமையை தூக்கி சுமப்பது என் கடமை. அற்புதமான தமிழ் மொழியை காப்பதே எனது கடமை. தமிழ்நாட்டின் குரலை இந்தியா முழுவதும் ஒலிக்கச் செய்வேன். நம்முடைய அத்தனை கலாசாராங்களும் நாட்டின் அடித்தளம்.
இந்தியாவில் தமிழ்நாடு இருக்கின்றது என்கின்றனர். தமிழ்நாட்டில், இந்தியா இருப்பதை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். தமிழ்நாட்டிலும் இந்தியா இருப்பதை நாங்கள் சொல்கின்றோம். இதுதான் எங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ், பாஜகவிற்கும் இருக்கும் வேறுபாடு" என்றார்.