திருப்பூர்: கூலிபாளையம் பகுதியில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுக்ரீஸ்வரர் ஆலயத்தில் இன்று (அக்.6) தரிசனம் செய்த முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'தமிழகத்தில் கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படுவது அதிகரித்து வருவதாகவும் கோயில்களிலிருந்து வருவாய் பெற்று கோயில்களைப் புனரமைக்க முடியாத நிலை இருந்து வருவதாகவும், பழங்கால கோயில்கள் அரசால் புனரமைக்கப்படாமல் இருப்பதாகவும்' குற்றம்சாட்டினார்.
'ஆவணங்களின் அடிப்படையில் 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படக்கூடிய நிலையில், 5000 ஏக்கர் மட்டுமே இதுவரை அரசு கையகப்படுத்தி இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவிக்கிறார் எனவும் , இதற்காக அவரை பாராட்டுகின்றனர். ஆனால், ஒட்டுமொத்தமாக உள்ளதில் 3.7 சதவீத இடம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
மீதமுள்ள இடங்கள் தற்போது பயன்பாட்டில் இருப்பதை ஏன் அரசு கண்டு கொள்வதில்லை எனவும், இந்த விவகாரத்தில் ஏற்கனவே, ஆட்சி செய்த அதிமுக அரசும் கண்டும் காணாமல் இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். ஐந்தாயிரம் ஏக்கர் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிக்கை விடப்படும் போது முன்னாள் முதலமைச்சர் அதற்குக் கண்டன அறிக்கை விடப்பட்டு கடந்த ஆட்சிக் காலத்தில் ஆவணங்களில் சுட்டிக்காட்டி உள்ள தகவலைத் தெரிவிக்க வேண்டும் அல்லவா? ஆனால், இரு வேறு கட்சிகளும் இவ்விவகாரத்தில் விட்டுக்கொடுத்து செல்வதாக' அவர் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், 'நேற்றைய தினம் பிரதமர் மோடி கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஒரு கருத்தைத் தெளிவுபடுத்தி உள்ளார் எனவும்; ஆனால், அது நூற்றுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் சதவீதம் உண்மை எனவும் இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுப்பாரானால் தன்னுடன் விவாதத்திற்குத் தயாரா? எனவும் கேள்வியெழுப்பினார். மு.க.ஸ்டாலின் சொல்வது உண்மை என்றால் இன்று இரவுக்குள் எனது உயிர்ப் பிரிந்துவிடும் எனவும் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது நூற்றுக்கு ஒரு லட்சம் சதவீதம் பொய் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து கோயில் நிலங்களை மட்டும் கையகப்படுத்தி அரசு அலுவலகங்களுக்குப் பயன்படுத்தும் அரசு ஏன் மற்ற மதங்களின் நிலத்தைக் கையகப்படுத்துவதில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
பணியில் நேர்மையாக இருந்தேன் எனவும் இனி கோயில்களின் மீது கவனம் செலுத்த இருப்பதாகவும் இனியும் பேசாமல் இருந்தால் இல்லாமலே செய்து விடுவார்கள் எனவும் தெரிவித்தார். நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும் செயல்படுவது இல்லை. ஆனால், கோயில்கள் குறித்து தவறாகவோ, கோயில் இடங்கள் கையகப்படுத்துவது தெரிந்தால் கண்டிப்பாகக் குரல் கொடுப்பேன் எனப் பேசினார். பிரதமர் மோடி கூறுவது பொய் என்றால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்குத் தகுந்த ஆதாரங்களை வெளியிட வேண்டும். ஆனால், அதை விடுத்து தனது குடும்ப சொத்துக்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும்' அவர் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: கம்பேக் கொடுத்த 'காதல் மன்னன்' நாயகி மானு.. நடிகர் அஜித் குறித்து புகழாரம்!