திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த தனியார் பள்ளி அருகே வட மாநிலத்தவரின் கடையில் போதை மிட்டாய்கள், புகையிலை விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அதிரடியாக கடைக்கு சென்ற மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் கொண்ட குழுவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புகையிலை, போதை மிட்டாய்கள் உள்ளிட்டவற்றை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கடையில் இருந்த ஒடிசாவைச் சேர்ந்த மிரித்தின் ஜே ராவத், பிரசாந்த், ராஜா ஆகிய மூவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் கடைக்கு அருகே தனியாக குடோன் வாடகைக்கு எடுத்து போதை மிட்டாய்கள், புகையிலை போன்ற பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, குடோனில் இருந்த போதை மிட்டாய்கள், 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அந்த குடோன், கடைக்கு சீல் வைத்த உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மூவரை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பூச்சி மருந்து அருந்திய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - மருத்துவமனையில் ரகளை செய்த உறவினர்கள்