மத்திய அரசானது திருப்பூர் மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவித்து அதற்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதில் குறிப்பாக திருப்பூரில் பிரதான பேருந்து நிலையமான பழைய பேருந்து நிலையத்தை முழுவதுமாக இடித்துவிட்டு நவீன முறையில் கட்டும் பணிகளும், அதனையொட்டி இருந்த பள்ளிக்கூடத்தை அகற்றிவிட்டு அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டதால் அதற்கு மாற்றாக பொதுமக்கள் வசதிக்காக யுனிவர்சல் திரையரங்கு அருகில் அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முகப்புப் பகுதியிலும், கோயில் வழியிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன.
பேருந்து தற்போது செல்லும் வழி:
இதில் ஈரோடு சேலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள், அவினாசி சாலை, பெருமாநல்லூர் சாலை, ஊத்துக்குளி சாலை என இதன் வழியாக செல்லும் நகர பேருந்துகள் யுனிவர்செல் திரையரங்கு அருகே உள்ள பேருந்து நிலையத்தில் இருந்தும், பல்லடம், கோயம்புத்தூர், உடுமலை, பொள்ளாச்சி பேருந்துகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிலையத்தில் இருந்தும் செல்கின்றன.
மேலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் கோயில் வழியில் இருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. தவிர காங்கேயம் மார்க்கமாக செல்லும் நகர பேருந்துகள், சிற்றுந்துகள் தற்போது பழைய அரசு மருத்துவமனைக்கு முன்பு இருந்து செல்கின்றன.
மக்களின் அவசரநிலை:
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக திருப்பூரில் இவ்வளவு பெரிய போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய பேருந்து நிலையம் தவிர மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள் பேருந்து நிறுத்தங்களில், வெளியூர், உள்ளூர் பயணிகள் வந்து செல்ல தேவையான அடிப்படை வசதிகள் முற்றிலுமாக செய்யப்படவில்லை. குறிப்பாக யுனிவர்செல் திரையரங்க பேருந்துநிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளும் இயற்கை உபாதைகளுக்கு, அருகே உள்ள நொய்யல் ஆற்றின் கரையில் ஒதுங்கி வருகின்றனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், அவசரத் தேவைகளுக்கு செல்ல உரிய கழிப்பிட வசதி இல்லை. ஆண்களாவது ஒதுக்கு புறமாக செல்கின்றனர். பெண்களின் நிலை இன்னும் சிரமம். இலவச குடிநீர் வசதியும் இல்லாததால் குடிநீருக்காக பேருந்து நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள சாலையோர கடைகளுக்கு நடக்க வேண்டியுள்ளது.
தென்மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீர் வாங்கவோ, உணவுப் பொருட்கள் வாங்கவோ இந்த தற்காலிக பேருந்து நிலையங்களில் கடை வசதிகள் இல்லை. அதுமட்டுமின்றி ஒரு பேருந்து நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகள் அடுத்த பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கான இணைப்பு பேருந்து வசதிகளையும், அவை குறித்த தகவல்களையும் முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையாக கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில், தற்காலிக பேருந்து நிலையங்களில் குடிநீர் கழிப்பிட வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பொதுமக்கள் வைக்கும் புகார்களுக்கு உரிய முறையில் தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனா குறித்து பாடல் பாடி அசத்தும் அரசு அலுவலர்