திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் பிஏபி சட்ட விதிகளின்படி ஏழுநாள் பாசனம், ஏழுநாள் அடைப்பு என மாதத்துக்கு இரண்டு சுற்று தண்ணீர் விட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் அவ்வாறு நடக்காமல், 14 நாட்களுக்கு பதிலாக மூன்று நாட்கள் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்பட்டு, மீதமுள்ள நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவது இல்லை.
புன்செய் விவசாயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ள சூழலில், வெள்ளக்கோவில் கால்வாய் மூலம் கிடைக்கும் நீரை வைத்து ஆடு, மாடுகளுக்கான தண்ணீர் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், திருமூர்த்திமலை வாய்க்காலின் அருகிலேயே மின் மோட்டார் மூலம் தண்ணீர் திருடப்படுவதாகவும், இதனால் கடை மடை விவசாயிகளுக்கு சிறிதளவு கூட தண்ணீர் கிடைப்பதில்லை என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது குறித்து பலமுறை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, காங்கேயம், வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட விவசாயிகள், தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காங்கேயம், வெள்ளக்கோவில் பகுதிகளில் இன்று (ஜனவரி 19) ஒரு நாள் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது.