திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (35). திருமணமாகாத இவர் தனது தாய் ஜெயந்தியுடன் வசித்து வந்தார்.
பெயிண்டர் வேலை பார்த்து வந்த இவர் தனது வீட்டின் பக்கத்தில் குடியிருக்கும் செல்வம் என்பவரது பெயிண்டிங் கான்ட்ராக்ட்களை தொடர்ச்சியாகத் தட்டிப் பறித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் தொழில் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஜெயந்தி தனது மகளை காண சென்னைக்கு சென்றுள்ள நிலையில், நேற்று (அக்.03) இரவு நேரத்தில் மது போதையில் இருந்த சுரேஷ்குமார், பேன்ட் உள்ளிட்ட கீழ் ஆடைகள் இன்றி தனது வீட்டின் அருகே விழுந்து கிடந்துள்ளார். இதனை கண்ட செல்வம் சுரேஷ்குமாரை எச்சரித்து வீட்டுக்குள் செல்ல அறிவுறுத்தியுள்ளார்.
பின் மது போதையில் இருந்த சுரேஷ்குமார், செல்வத்தை கடுமையாக திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வம் அருகில் இருந்த கல்லை எடுத்து சுரேஷ்குமார் தலையில் போட்டுவிட்டு தனது வீட்டிற்கு சென்று விட்டார். அதிகாலையில் சுரேஷ்குமார் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். பின் இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சுரேஷ்குமாரை திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து செல்வத்தை கைது செய்த காவல்துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.