திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி அணையில் பாலாறு படுகை இரண்டாம் மண்டலத்திற்கு 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் தகுந்த இடைவெளி விட்டு நான்கரை சுற்றுகளாக, மொத்தம் 8 ஆயிரத்து 700 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ஆட்சியர் விஜயகார்த்திகேயன் திறந்து வைத்தனர்.
இதன் மூலம் தளி வாய்க்கால் பாசன நிலங்களுக்கு 700 மில்லியன் கன அடி வீதமும், பரம்பிக்குளம் பிரதான கால்வாயில் 912 கன அடி அளவுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கேயம் ஆகிய வட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி, சூலூர் வட்டங்களில் 94 ஆயிரத்து 201 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிபெறும்.
விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுப்பணித் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு, துறை சார்ந்த அலுவலர்கள், விவசாய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.