எப்போ வந்தாலும் வைத்து செய்யப்படுவீர்கள்... மீண்டும் டிரெண்டாகும் #GoBackModi! - பாஜக
சென்னை: திருப்பூர் வர இருக்கும் பிரதமர் மோடிக்கு எதிராக திரும்பிப் போ மோடியே (#GoBackModi) என்ற ஹேஷ்டேக் மீண்டும் டிவிட்டரில் டிரெண்டாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரில் நடைபெற இருக்கும் அரசு விழா மற்றும் பாஜக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இன்று திருப்பூர் வர இருக்கிறார். விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் மோடி இன்று பிற்பகல் 2.35 மணிக்கு கோவை வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூருக்கு வர இருக்கிறார். பிரதமரின் வருகையையொட்டி திருப்பூர் மற்றும் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக வர இருக்கும் மோடிக்கு எதிராக #GoBackModi மற்றும் #GoBackSadistModi என்ற இரு ஹேஷ்டேக்குகளை டிவிட்டரில் நெட்டிசன்கள் மீண்டும் டிரெண்டாக்கியுள்ளனர். இந்த இரு ஹேஷ்டேக்குகளும் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளன.
கடந்த வருடம் பிரதமர் மோடி சென்னை வந்தபோது நெட்டிசன்கள் அவருக்கு எதிரான ஹேஷ்டேக்குகளை உலகளவில் டிரெண்டாக்கினர். அதேபோல் கடந்த மாதம் அவர் மதுரைக்கு வந்தபோதும் இதே ஹேஷ்டேக்குகளை டிரெண்டாக்கினர்.
இதற்கிடையே நேற்று முன் தினம் (பிப்.8) அஸ்ஸாம் சென்ற மோடிக்கு அஸ்ஸாம் மாணவர்கள் சங்கம் 'மோடியே திரும்பி போ' என்ற கோஷத்தை எழுப்பியும் கறுப்பு கொடி காட்டியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அதேபோல் ஆந்திரா சென்ற மோடிக்கு எதிராக GoBackModi என்ற பிரமாண்ட பேனர்கள் வைத்து ஆந்திரவாசிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
நெருக்கடி பிரகடன காலகட்டத்தில் இந்திரா காந்திக்கு நாடு முழுவதும் இப்படி ஒரு எதிர்ப்பு இருந்தது. அதற்கு பிறகு இந்திய நாட்டின் ஒரு பிரதமருக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுவது இதுவே முதல்முறை எனவும், இப்படி எதிர்ப்பு எழுகிறதென்றால் அது நாட்டு மக்களின் குறை இல்லை பிரதமரின் குறைதான் என எதிர்க்கட்சிகள், அரசியல் விமர்சகர்கள் உட்பட பலர் கூறி வருகின்றனர்.
Text
Body
Conclusion: